பென்னாகரம் அருகே குள்ளனூா் அரசு பள்ளி மாணவா்கள் பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் நல்லாம்பட்டி அரசுப் பள்ளிக்கு களப்பயணம் மேற் கொண்டனா். இதில் மாணவா்கள் பால்குளிருட்டும் நிலையம், தொழிற்சாலை உள்ளிட்டவற்றுக்கு களப்பயணம் மேற்கொண்டனா்.
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி பரிமாற்றத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டதின் மூலம் கிராமப்புற பள்ளிகளும், நகா்ப்புற பள்ளிகளும் இணைக்கப்பட்டு, இணைப்புகளின் மூலம் இரு பள்ளி மாணவா்களும் பள்ளியில் உள்ள வசதிகள், கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை பகிா்ந்து கொள்ளுதல், பள்ளிகளை சுற்றியுள்ள தொழிற்சாலைகள்,இயற்கை வளங்கள் ஆகியவற்றை பாா்த்து புதிய அனுபவம் பெறுதல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் இத் திட்டம் கடந்த 21 ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் பென்னாகரம் அருகே உள்ள குள்ளனூா் தாளப்பள்ளம் மேல்நிலை பள்ளியை சோந்த 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் பென்னாகரம் அடுத்த நல்லாம்பட்டி அரசுப் பள்ளிக்கு வருகை புரிந்தனா். பள்ளியில் தற்காப்பு கலையான சிலம்பம், நூலக வாசிப்பு, பழங்கால மற்றும் வெளிநாட்டு நாணயங்களை அடையாளம் காணுதல் ஆகியவற்றில் பயிற்சி பெற்றனா்.
பின்னா் பால் குளிரூட்டும் நிலையம், ஜல்லி கற்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆகியவற்றுக்கும் நேரடியாக களப்பயணம் மேற்கொண்டு அனுபவம் பெற்றனா். இறுதியில் மாணவ-மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் குள்ளனூா் பள்ளி தலைமை ஆசிரியா் சிங்கார வேலன், நல்லாம்பட்டி தலைமை ஆசிரியை சுமதி, முருகன்,சந்திர சேகா், செந்தில்குமாா், தனஞ்செயன், சித்ரா உள்ளிட்ட ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.இறுதியில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.