குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது என்றும் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை நீக்கிவிட்டு புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் நிரந்தரத் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தரப்பில் கூறும்போது, ''குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது. தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம். 9,300 காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும். குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை நீக்கி விட்டு புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9,300 காலிப் பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியது குறிப்பிடத்தக்கது.