தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அதன்படி, கடைசியாக 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்தது. இதையடுத்து 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடக்கிறது.
தமிழகத்தில் கோடை காலம் முடிந்த பின்னர் ஜூன் 1ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 15ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
அதையடுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். முதல்கட்டமாக நடக்கும் கணக்கெடுப்பின்போது 34 கேள்விகள் கேட்கப்படும்.
ஒரு வீட்டில் எத்தனை பேர், எவ்வளவு அறைகள் உள்ளது, கழிப்பிட வசதி, கழிவுநீர் வசதி, கார், மோட்டார் சைக்கிள் விவரம், குளுகுளு வசதி, இன்டர்நெட் வசதி உள்ளதா என பல்வேறு கேள்விகள் அதில் இடம்பெறும். 2வது கட்ட மக்கள் தொகை இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படும். அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை 21 நாட்கள் கணக்கெடுப்பு நடைபெறும். இதில் 28 கேள்விகள் கேட்கப்படும். அதன்படி குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயர், படிப்பு, வேலை, திருமணம் ஆனவர்களா, குழந்தைகள் எத்தனை, இடம் பெயர்ந்தவரா, எஸ்.சி., எஸ்.டி. இனத்தவரா என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படும். இதுவரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி காகித முறையில் நடைபெற்று வந்தது.
இந்த முறை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செல்போன் செயலி மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும் இதற்கான செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து தகவல்களை பதிவு செய்வார்கள். செயலியை பயன்படுத்த விருப்பம் இல்லாதவர்கள் காகித முறையை பின்பற்றலாம். செல்ேபான் மூலம் பெறப்படும் புள்ளி விவரங்கள் நேரடியாக சர்வருக்கு சென்றுவிடும். தாமதம் ஏற்படாமல் விரைவாக கணக்கெடுப்பை முடிக்க இது உதவும். பொதுவாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்த பின்னர் அதனை வெளியிடுவதற்கு 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகிவிடும். ஆனால் இந்த முறை ஒரு வருடத்திற்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி குறித்தான அறிவிப்பாணையை வெளியிடுவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வருகிற பிப்ரவரி மாதம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்று தெரிகிறது. அதன்பின்னர் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இந்த பணியில் ஈடுபடுவார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முழு செலவையும் மத்திய அரசு ஏற்கிறது. தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அரசு பள்ளி ஆசிரியர்களை வைத்தே நடத்தப்படும். இதையொட்டி அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக இந்த பணியில் ஈடுபட வேண்டும் என்று பள்ளி கல்வி துறை அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
8 கோடியை தாண்டும்?
2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 88 ஆயிரத்து 958 ஆகும். 2001-11 காலகட்டத்தில் 10.60 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. இதில் ஆண்கள் 3,61,58,871 பேர், பெண்கள் 3,59,80,087 பேர். 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற அடிப்படையில் பாலின விகிதம் இருந்தது. எழுத்தறிவு பெற்றவர்கள் சதவிகிதம் 73.45ல் இருந்து 80.33 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, தமிழக மக்கள் தொகை 8 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் அதிகபட்சமாக 43,43,645 பேர் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. அதேநேரம் இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.