பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சித்தார்த் நகர் பகுதியில் அம்மாவட்ட அமைச்சர் சதீஷ் திவேதி தனது தொகுதியில் அரசு செலவில் இலசவ திருமண நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் மணப்பெண்களுக்கு ஒப்பனை செய்ய அரசு பள்ளி ஆசிரியர்களை பணியில் அமர்த்த அம்மாவட்ட கல்வித்துறை அதிகாரி துருவ் பிரசாத் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "முதல்வர் யோகி ஆதித்யநாத் திருமணத் திட்டத்தின் கீழ், மாவட்ட கல்வி அலுவலக மைதானத்தில் திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக இங்கே பட்டியலில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்களுக்கு மணப்பெண்களின் ஒப்பனை செய்யும் கடமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதற்காக, 20 உதவி ஆசிரியர்கள் காலை 9 மணிக்கு விழா நடைபெறும் இடத்தை அடைய வேண்டும்" என வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களிலேயே சமூக ஊடங்களில் பரவி அரசின் நடவடிக்கைக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தது. இதனையடுத்து மாவட்ட உயர் கல்வித் துறை அதிகாரி சூர்யகாந்த் திரிபாதி முன்பு வெளியிடப்பட்ட உத்தரவை ரத்து செய்வதாகவும், அந்த உத்தரவை பிறப்பித்த அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மற்றொரு உத்தரவு மூலம் தெரிவித்தார்.
ஏற்கனவே, மாநிலத்தில் செயல்படும் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளில் இல்லை, பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என பல்வேறு குளறுபடி உள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு திருமண ஒப்பனை பணியை ஒதுக்கீடு செய்ததை மன்னிக்க முடியாதது.
மேலும், அமைச்சர் உத்தரவின் பேரில் நடைபெற்றுள்ளதால் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்து வருகின்றனர்.