சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இருக்கிறது மிளகனூர் கிராமம். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி இருக்கிறது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். 7 ஆசிரியர்கள் இந்த பள்ளியில் பணியாற்றுகின்றனர். நேற்று உலக பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளியில் சிறப்பு நிகழ்வு ஒன்றை நடத்த ஆசிரியர்கள் முடிவு செய்தனர். அதாவது பள்ளியில் பயிலும் மாணவிகளில் சிறந்து விளங்கும் ஒருவரை ஒருநாள் தலைமையாசிரியராக நியமிப்பது தான் அது.
அதன்படி கல்வி, விளையாட்டு, பழக்கவழக்கம், பிறருக்கு உதவும் குணம், ஒழுக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய காவ்யா என்கிற மாணவியை தேர்வு செய்தனர்.
அவர் 10 வகுப்பு படித்து வருகிறார். ஒருநாள் தலைமையாசிரியராக தேர்வான காவ்யாவை பள்ளி தலைமை ஆசிரியரும் பிற ஆசிரியர்களும் சேர்ந்து இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் அவர்கள் தலைமையாசிரியரின் செயல்பாடுகள் குறித்து காவ்யாவிற்கும் எடுத்துரைத்தனர். தொடர்ந்து காவ்யா பள்ளியின் முக்கிய கோப்புகளை பார்வையிட்டார்.
ஆசிரியர்களிடம் கலந்தாய்வு நடத்திவிட்டு ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று ஆய்வு நடத்தினார். வகுப்பறையில் மாணவ மாணவிகளிடம் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சி பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினர். ஒருநாள் தலைமையாசிரியராக மாணவி ஒருவர் செயல்பட்டது பிற மாணவிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.