பயோமெட்ரிக் கருவியில் வருகைப் பதிவு செய்யாத பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் ஆதார் எண்ணுடன் இணைந்த பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு கருவி அமல்படுத்தப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் கருவிகள் கல்வித்தகவல் மேலாண்மை ( EMIS ) இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் வருகைப் பதிவு நேரம், தகவல் என்று அனைத்தையும் அதன் மூலம் கல்வி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். பயோமெட்ரிக் கருவியில் அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களது வருகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், பயோமெட்ரிக் கருவியில் வருகையைப் பதிவு செய்யாத பள்ளிகள், கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வரும் ஜனவரி 28-ம் தேதிக்குள் பயோமெட்ரிக் கருவியில் ஏன் வருகையைப் பதிவு செய்யவில்லை என்று அதற்கான காரணத்தை பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் விளக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். இனி பயோமெட்ரிக் கருவியில் வருகையைப் பதிவு செய்யாத பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் மீதும், உரிய விளக்கம் அளிக்காத பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.