கோவை:கோவையில் பயோமெட்ரிக் மூலம், வருகைப்பதிவு மேற்கொள்ளாத 22 பள்ளிகள், அதற்கான காரணத்தை தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறையின் கீழ், மாவட்ட வாரி யாக உள்ள கல்வித்துறை அலுவலகங்கள், அரசு, அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், ஆதார் எண்ணுடன் கூடிய பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.தினசரி வருகைப்பதிவு மேற்கொள்ளாத பள்ளிகள், தாமதமாக பள்ளிக்கு வருகைப்புரிந்தோர் குறித்த தகவல்கள், காலை 10:30 மணியளவில் திரட்டப்படுகிறது. முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து, உரிய பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் பெறப்படுகிறது.இதேபோல், இயக்குனரகத்திலும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களின் வருகைப்பதிவு கண்காணிக்கப்படுகிறது.
சில பள்ளிகள், தற்போது வரை பயோமெட்ரிக் பதிவு மேற்கொள்வதில் சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.தொழில்நுட்ப குளறுபடிகள் இருப்பின் சரிசெய்து தரும் நோக்கில், மாவட்ட வாரியாக, பயோமெட்ரிக் பதிவு மேற்கொள்ளாத பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகள் விளக்கம் அளிக்க, நேற்று மாலை வரை அவகாசம் அளித்து, இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டிருந்தார். கோவை மாவட்டத்தில், 22 பள்ளிகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.