மாணவர்களை கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறை 'செயலி'
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடைவு நிலைகளைக் கண்காணிப்பதன் ஒரு பகுதியாக, வகுப்பறைக் கற்றல், கற்பித்தலை மேம்படுத்தும் வகையில், அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி, பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து ஆய்வு அலுவலர்களும் வகுப்பறை நிகழ்வுகளை உற்றுநோக்கும் வகையில், 'தமிழ்நாடு வகுப்பறை நோக்கி செயலி' (Observation mobile app-TNVN) பள்ளி கல்வித்துறையால் உருவாக்கப்பட்டு சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் சோதனை முறையில் (பைலட்ஸ்டடி) பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து கோவை கல்வித் துறை அலுவலர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு மாணவரின் கற்றல் அடைவு நிலைகளை முறையாகக் கண்காணித்து முன்னேற்றம் அடையச் செய்வதற்கு இச்செயலி வழிவகை செய்கிறது.
குறிப்பாக கற்றலில் பின்தங்கியுள்ளமாணவர்கள் மீது தனி கவனம் செலுத்த முடிகிறது என்று சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இச்செயலியைப் பயன்படுத்தி வரும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது அனைவரிடத்திலும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், மீதமுள்ளமாவட்டங்களில் ஒவ்வொரு வட்டாரவள மையத்திலிருந்தும், கணினிதொழில்நுட்பத்தில் அனுபவமுள்ளஆசிரியர் பயிற்றுநர் மற்றும் மாவட்டதர ஒருங்கிணைப்பாளர்கள், 'எமிஸ்' ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தும் மேற்கண்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.