எப்போதும்போலவே, ஹரேகலா ஹஜப்பாவுக்கு கடந்த சனிக்கிழமையும் விடிந்தது. 64 வயதான அவர், ரேஷன் கடையில் பொருள்கள் வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்தார். அப்போது வந்த ஒரு தொலைபேசி அழைப்பு, அவரை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்த்திருக்கிறது. யார் இந்த ஹஜப்பா? அப்படி அந்த அழைப்பில் யார் பேசியது?
டெல்லியிலிருந்து அழைப்பு வந்தபோது, ஹஜப்பா ரேஷன் கடையில் தனது 35 கிலோ அரிசியை வாங்க வரிசையில் நின்றுகொண்டிருந்தார். அவரின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அழைத்தவர் இந்தியில் பேசியதால், ஹஜப்பாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் தன்னுடைய செல்போனைக் கொடுத்து, `அவர் என்ன பேசுகிறார் என்பதை கேட்டுச் சொல்லுங்கள்' என்று கூறியுள்ளார்.
அவராலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், ஹஜப்பாவுக்கு பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை மட்டும் அவரிடம் பகிர்ந்துகொள்கிறார். மாலையில் அவரைத் தேடிவந்து சந்தித்த பத்திரிகையாளர் ஒருவர் மூலம் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.
யார் இந்த ஹஜப்பா?
கர்நாடக மாநிலம், மங்களூருவின் புறநகரிலுள்ள ஹரேகலா எனும் பகுதியைச் சேர்ந்தவர், ஹஜப்பா. ஹரேகலா ஹஜப்பா என்றும் `செயின்ட் ஆஃப் ஆல்ஃபாபெட்ஸ்' என்றும் பரவலாக அறியப்படுகிறார். இவர், அப்பகுதியிலுள்ள சந்தை ஒன்றில் ஆரஞ்சுப் பழங்களை விற்பனை செய்துவருகிறார். சில வருடங்களுக்கு முன்பு, வெளிநாட்டவர் ஒருவர் ஹஜப்பாவிடம் ஒரு கிலோ ஆரஞ்சு என்ன விலை என்று கேட்டுள்ளார். தனக்கு ஆங்கிலம் தெரியாததால் அவரால் பதிலளிக்க முடியவில்லை. தனது கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கும் இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்வதை அவர் விரும்பவில்லை. அந்தக் குழந்தைகளுக்காக ஆரம்பப் பள்ளி ஒன்றைத் தொடங்க அவர் முடிவுசெய்துள்ளார்.
ஆரஞ்சு விற்பதன்மூலம் வரும் சொற்ப வருவாயைச் சேமித்து, தனது கிராமத்தில் உள்ள மசூதி ஒன்றில் 1999-ம் ஆண்டு ஆரம்பப் பள்ளியைத் தொடங்கினார். இந்தப் பள்ளியில், முதலில் 28 மாணவர்கள் படித்தனர். அரசிடமிருந்தும் நன்கொடையாளர்களிடமிருந்தும் வந்த பணத்தின்மூலம் இந்தப் பள்ளியைக் கட்டினார். பின்னர், நண்பர்கள் மற்றும் அரசின் உதவியுடன் அரசாங்கப் பள்ளியாக மாறியது. தற்போது, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கும் உயர்நிலைப் பள்ளியாகச் செயல்பட்டுவருகிறது. தொடக்கத்தில், தன்னுடைய பள்ளிக்கு ஹஜப்பாவின் பங்களிப்பு 5,000 ரூபாய்.
``பள்ளி வளாகத்தைச் சுத்தப்படுத்துவது, மாணவர்கள் குடிக்க தண்ணீர் ஏற்பாடுசெய்வது, கல்வி வசதிகளை மேம்படுத்த தொடர்ந்து அதிகாரிகளிடம் பேசுவது என வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை குழந்தைகளின் கல்விக்காகவே செலவிட்டுவருகிறார் ஹஜப்பா" என்று அக்கிராமத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் கூறுகிறார். ஹஜப்பாவின் தொடர் முயற்சியாலேயே அதிகாரிகளின் கவனம் இந்தப் பள்ளிமீது விழத் தொடங்கியிருக்கிறது. 60 வயதைக் கடந்தபோதும் பள்ளியின்மீது மிகுந்த அக்கறைகொண்டு, அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு செயல்பட்டுவருகிறார் ஹஜப்பா, என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
ஹஜப்பா
விருது குறித்துப் பேசிய ஹஜப்பா, ``கடந்த 2014-ம் ஆண்டு, காவல்துறை துணை ஆணையர் ஏ.பி.இப்ராஹிம்தான் மத்திய அரசிடம் எனது பெயரை விருதுக்குப் பரிந்துரைத்தார். அதன்பிறகு, நான் அதை மறந்துவிட்டேன். இப்போது, விருது எனக்குக் கிடைத்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. எல்லாம் கடவுள் அளிப்பவை. ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த நான், இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. கல்வி அளிப்பதுதான் என்னுடைய கனவு. இதற்காகத் தொடர்ந்து உழைப்பேன்.
எனக்கு எவ்வளவு பண விருதுகள் கிடைத்தாலும், அவை அனைத்தையும் இந்தப் பள்ளிக்காகவே செலவிடுவேன். இதே பள்ளி வளாகத்தில் ஒரு கல்லூரி அமைக்க வேண்டும் என்பதே என்னுடைய கனவு. அரசாங்கம் அதை நிறைவேற்றும் என நம்புகிறேன். அப்போதுதான் மாணவர்கள் கல்வியை மேலும் தொடர்வார்கள். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கும் ஊடக நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பேசினார்.
பள்ளியிலுள்ள வகுப்பறைகளுக்கு இந்தியாவின் சாதனையாளர்களான சுவாமி விவேகானந்தர், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ராணி அப்பாக்கா, கல்பனா சாவ்லா ஆகியோரின் பெயர்களை வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவர், கடந்த 2009-ம் ஆண்டு சி.என்.என் ஐ.பி.என் ஊடகத்தின் `ரியல் ஹீரோ' என்ற விருதை வென்றார். கர்நாடகா அரசின் ராஜ்யோத்சவா விருதையும் 2013-ம் ஆண்டு பெற்றுள்ளார். தற்போது, நாட்டின் உயரிய விருதாகக் கருதப்படும் பத்மஶ்ரீ விருதை வென்று, பலரது கவனத்தையும் பெற்றுள்ளார்.
குடியரசு தினமான நேற்று, இவருக்கு மாவட்ட நிர்வாகம் பாராட்டு விழா நடத்தி சிறப்பித்துள்ளது. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தனிஒரு மனிதனாக உழைக்கும் ஹஜப்பாவுக்கு, நாட்டின் பல்வேறு கல்வியாளர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.