சர்வர் குளறுபடி
* பயிற்சி இல்லாமை
* குறைகளை நீக்க முடியாமல் அதிகாரிகள் தத்தளிப்பு
சென்னை: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சம்பளம் பெற்றுத் தர பொறுப்பேற்ற நிறுவனம் போதிய பயிற்சி அளிக்காமல் போனதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாதாமாதம் பெற்று வரும் சம்பளத்தை அரசிடம் பெற்று அதை நேரடியாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பும் பணியை தனியார் நிறுவனத்திடம் அரசு ஒப்படைத்துள்ளது. ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனம் சம்பளப் பட்டியல் தயாரிக்க புதிய முறையை அறிமுகம் செய்துள்ள நிலையில், அதற்கான பயிற்சியை கருவூல ஊழியர்களுக்கு அளிக்கவில்லை.
இதனால் சம்பளப் பட்டியல் தயாரிக்க முடியாமல் கருவூல ஊழியர்கள் திணறுகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாதச் சம்பளம் பெற முடியாமல் தற்போது தவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய முறையின் கீழ் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க இணைய தளம் மூலம் நேரடியாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பும் பணியை விப்ரோ என்ற தனியார் நிறுவனத்துக்கு அரசு ஒப்படைத்துள்ளது. அதன்படி சம்பளம் வழங்குவதில் நிறைய பிரச்னைகள் எழுந்துள்ளன. அவற்றை இன்னும் சம்பந்தப்பட்ட துறை சரி செய்யவில்லை. ஏடிஎம் மூலம் பணம் எடுக்கச் செல்லும் போது அதற்கான சர்வர் பிரச்னையால் சம்பளப் பட்டியல் தயாரிக்க 12 மணி நேரம் ஆகிறது. விப்ரோ நிறுவனம் மூலம் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள், சம்பளப் பட்டியல் தயாரிக்கும் அளவுக்கு போதிய பயிற்சி பெறவில்லை. அதனால், அனைத்து மாவட்டங்களிலும் அவர்களால் மற்றவர்களுக்கு பயிற்சி கொடுக்க முடியாமல் திணறுகின்றனர்.
இதனால் மாவட்டங்களில் உள்ள கருவூல அலுவலர்கள், சார்பு கருவூல அலுவலர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், மற்றும் அந்தந்த துறையில் ஊதிய பட்டியலை தயார் செய்யும் அலுவலர்கள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் சம்பளப்பட்டியல் தயார் செய்து, கருவூலங்களுக்கு எடுத்துச் செல்லும் போது, புதிய முறையின் கீழ் பட்டியல் பதிவேற்றம் செய்துள்ளீர்களா என்று கேட்கின்றனர். அப்படி இல்லை என்றால் மாவட்ட கருவூல அதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள் என்று திருப்பி அனுப்புகின்றனர். மாவட்ட கருவூல அதிகாரியிடம் முறையிட்டால், அங்குள்ள இணைய தள சேவையில் சர்வர் வேலை செய்யவில்லை என்று திருப்பி அனுப்புகின்றனர். இதற்கு காரணம், விப்ரோ நிறுவனத்திடம் சம்பளம் அனுப்பும் பணியை ஒப்படைத்ததுதான். ஒப்பந்தம் செய்து கொண்ட அந்த நிறுவனம் சரியான முறையில் சர்வர்களை ஏற்படுத்தவும் இல்லை, வேகப்படுத்தவும் இல்லை. மேலும் சம்பளப்பட்டியல் தயாரிக்கும் பயிற்சி அளிக்கவும் ஆட்களை நியமிக்கவில்லை. இதனால் அரசு ஊழியர்கள், சம்பளம் பெற முடியாமல் தவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, அந்தந்த மாவட்டங்கள் ஆட்சியர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மனித வள மேம்பாட்டு திட்டம் குறித்த கூட்டம் கடந்த வாரம் நடந்துள்ளது. அந்த கூட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் உள்ள பிரச்னை குறித்து பேசப்பட்டது. அதன்படி, இந்த மாதமே மேற்கண்டவர்களுக்கு சம்பளம் பெற்றுத் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால், மாவட்ட சார்பு கருவூல அலுவலர்கள், 26ம் தேதிக்குள் ஐஎப்எச்ஆர் எம்எஸ் மூலம் பதிவேற்றம் செய்யவில்லை என்றால் சம்பளம் பெற்றுத் தர முடியாது என்று திருப்பி அனுப்புகின்றனர். சர்வரை வேகப்படுத்தாமலும், சம்பளப் பட்டியல் தயாரிக்கும் அலுவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்காமலும் இந்த புதிய முறையின் கீழ் சம்பளம் பெற்றுத் தருவது கடினமாக இருக்கிறது. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் இந்த பிரச்னை நீடிப்பதால் ஆசிரியர்கள் சம்பளம் பெற முடியாமல் தவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பழைய முறையில் சம்பளம் பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.