உலகை ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா வைரஸ்!! - Asiriyar.Net

Monday, January 27, 2020

உலகை ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா வைரஸ்!!






சீனாவிலிருந்து தற்போது உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் அறிகுறி மற்றும் காரணம், வரலாறு என்ன?

கொரோனா வைரஸ் பாலூட்டிகளிலும் பறவைகளிலும் நோய்களை ஏற்படுத்தும் ஒரு தீநுண்மி ஆகும், இவை பசுக்கள், பன்றிகளில் வயிற்றுப்போக்கையும், கோழிகளில் மேல் சுவாச நோயையும் உண்டாக்கும்.

இத்தீநுண்மிகள் மனிதர்களில் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இத்தொற்றுகள் பெரும்பாலும் மிதமானவையாக இருந்தாலும் அரிதான சந்தர்ப்பங்களில் ஆபத்தானவையாக உள்ளன.

கொரோனா வைரஸ்கள் நிடோவைரலசு வரிசையில், கொரோனவிரிடே குடும்பத்தில் ஆர்த்தோகொரோனவிரினே என்ற துணைக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். இவை ஒரு நேர்மறை உணர்வு கொண்ட ஒற்றைத்-தனிமைப்படுத்தப்பட்ட ஆர்.என்.ஏ மரபணு மற்றும் திருகுசுருள் சமச்சீர்மை அதிநுண்ணுயிர் அமைப்பு (நியூக்ளியோகாப்சிட்) கொண்ட உறைசூழ் தீநுண்மிகள் ஆகும்.

இவற்றின் மரபணு அளவு சுமார் 26 முதல் 32 கிலோபேசுகள் வரை இருக்கும், இது ஆர்.என்.ஏ தீநுண்மி ஒன்றிற்கு மிகப்பெரியதாகும்.

கொரோனா வைரஸ் 1960களில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. கோழிகளில் தொற்று மூச்சுக்குழாய் அழற்சித் தீநுண்மி மற்றும் மனித நோயாளிகளின் நாசிக் குழிகளில் இருந்து பொதுவான சளியைக் கொண்ட இரண்டு தீநுண்மிகள் முதன்முதலாகக் கன்டுபிடிக்கப்பட்டவை ஆகும். இவை பின்னர் மனித கொரோனா வைரஸ் 229E (human coronavirus 229E), மனித கொரோனா வைரஸ் OC43 என பெயரிடப்பட்டன. இந்த நச்சுயிரிக் குடும்பத்தின் பிற தீநுண்மிகள் 2003 இல் SARS-CoV, 2004 இல் HCoV NL63, 2005 இல் HKU1, 2012 இல் MERS-CoV, 2019 இல் 2019-nCoV உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டன. இவைகளில் பெரும்பாலானவை கடுமையான சுவாசக்குழாய் தொற்றுநோய்களில் ஈடுபட்டவை ஆகும்.

31 டிசம்பர் 2019 அன்று, உலக சுகாதார அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 2019-nCoV என்ற கொரோனா வைரஸின் ஒரு புதிய திரிபு சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 2020 ஜனவரி 24 இற்குள் 25 இறப்புகள் பதிவாகின, 547 பேர் பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சீனாவில் கொடிய கொரோனா வைரஸ் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டே வருகிறது. இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானோரில், 237 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், புதிய கொரோனா வைரஸ் 1,287 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது. மேலும் உலகெங்கிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் ஒரு தொற்றுநோயைத் தடுப்பதற்காக, சீனா ஒரு "மோசமான சூழ்நிலையை" எதிர்கொள்கிறது என்று ஜனாதிபதி ஜி ஜின்பிங் சனிக்கிழமை ஒரு பொலிட்பீரோ கூட்டத்தில் கூறினார்.

திபெத் தவிர சீனாவின் ஒவ்வொரு பகுதியிலும் இந்த வைரஸ் அதிகமாக பரவுகிறது. அமெரிக்கா தனது தூதரக அதிகாரிகளையும், அந்நாட்டு மக்களையும் வுஹானிலிருந்து வெளியேற்ற அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல பிரான்ஸ் மற்றும் தென் கொரியாவும் வுஹானில் சிக்கித் தவிக்கும் தங்கள் குடிமக்களை வெளியேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன?

இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு தடிமல் போன்ற மேல் சுவாச குழாய் நோய்கள் இலேசாக வெளிப்படலாம். ஆனால் கீழ் சுவாசக் குழாயையும் பாதிக்கலாம். குறிப்பாக இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு கடும் இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற நோய் அறிகுறிகளும் வெளிப்படுகின்றன என்று சீனாவின் சுகாதார தேசிய ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது.


அதேநேரம் மூக்கிலிருந்து நீர் வடிதல், தலைவலி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வான நிலை என்றபடியும் அறிகுறிகள் ஏற்பட முடியும். இவ்வைரஸ் தாக்கம் சில சமயம் மூச்சு குழாய் அழற்சி போன்ற கீழ் சுவாச குழாய் நோய்களை ஏற்படுத்தி தீவிர நிலையை அடையலாம். அதன் விளைவாக நிமோனியா, மூச்சு குழாய் அழற்சி ஏற்பட்டு ஈரல் பலவீனமடையலாம்.

Post Top Ad