குடியரசு நன்னாளில் பள்ளியில் கொடி ஏற்றுவது யார்? - முனைவர் மணி கணேசன் - Asiriyar.Net

Sunday, January 26, 2020

குடியரசு நன்னாளில் பள்ளியில் கொடி ஏற்றுவது யார்? - முனைவர் மணி கணேசன்




ஒவ்வோராண்டும் நாடு முழுவதும் தேசிய விழாக்களாக ஆகஸ்ட் 15 அன்று விடுதலைத் திருநாளும் ஜனவரி 26 அன்று குடியரசு நாளும் மிகச் சிறந்த முறையில் கொண்டாடப்பட்டு வருவது அறிந்த ஒன்று. விடுதலை நாளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், முதலமைச்சர், மக்கள் பிரதிநிதிகள் முறையே மத்திய, மாநில, மாவட்டத் தலைநகரங்களில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த நடைமுறையைப் பின்பற்றி அனைத்து வகைப் பள்ளிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அழைத்து மூவர்ணக் கொடியினை ஏற்றிச் செய்து மரியாதை செய்வது நல்ல நடைமுறை ஆகும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 

அதேவேளையில், குடியரசு நன்னாளில் மத்தியில் நிர்வாகத் தலைவராக விளங்கும் குடியரசுத் தலைவரும் மாநிலங்களில் நிர்வாகத் தலைவராகத் திகழும் ஆளுநர்களும் மாவட்ட அளவில் அனைத்துத் துறை நிர்வாகியான மாவட்ட ஆட்சியரும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்து வருவது வாடிக்கையான ஒன்று. ஆனால், இத்தகு நடைமுறை ஏனோ பல பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படாமல் பள்ளியின் நிர்வாகத் தலைவராக இருக்கும் பள்ளித் தலைமை ஆசிரியர் பெருமக்கள் தமக்குள்ள உரிமையைத் தாரை வார்த்து மற்றுமொரு முறை மக்கள் பிரதிநிதிகளாக அல்லது மக்களிடையே செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படும் அரசியல்வாதிகளைத் தேசியக் கொடி ஏற்றி வைக்கும் வழக்கத்தைப் பழக்கப்படுத்துவது நல்ல நடைமுறை ஆகா. 


தலைமை ஆசிரியர் பெருமக்கள் இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆகியோரிடம் சற்று பொறுமையாக விளக்கி தேசிய விழாக்களின் போது தேசியக் கொடி ஏற்றி வைக்கும் அவரவர் உரிமையை நிலைநாட்டுவது நல்ல தலைமைத்துவம் ஆகும். நல்லபடியாக கூறினால் நிச்சயம் அவர்கள் புரிந்து கொள்வார்கள். நமக்கேன் வீண் வம்பு என்று நினைப்பதும் யார் ஏற்றி வைத்தால் என்ன என்று ஒதுங்கிக் கொள்வதும் அவர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்களா என்று தமக்குத் தாமே நீதி வழங்குவதாகக் கூறியபடி அநீதி புரிவதும் நல்ல தலைமைப் பண்புக்கு ஏற்றதல்ல. தினமும் அல்லது வாரமிருமுறை நான் தானே தேசியக் கொடி ஏற்றுகிறேன் என்று சமாதானம் ஆவதும் சரியாகாது. தேசிய விழா அன்று ஊரார் முன்னிலையில் பள்ளியின் நிர்வாகத் தலைவர் என்னும் முறையில் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அவரவர் பள்ளியில் தேசியக்கொடியைப் பட்டொளி வீசப் மறக்கச் செய்வதென்பது பள்ளியின் பெருமையைப் பறைசாற்றும் நிகழ்வாகும். 


இதுகுறித்து தமிழக அரசு தக்க அரசாணை பிறப்பித்தும் அதையொட்டி கல்வித்துறை இயக்குநர் பெருமக்கள் தகுந்த செயல்முறைகள் வழங்கியும் மாவட்ட அளவில் அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோருக்குச் சுற்றறிக்கை அனுப்பியும் தலைமையாசிரியர் பெருமக்களுக்கு உரிய உரிமையை நிலைநாட்டுவது எதிர்வரும் குடியரசு நன்னாளை மேலும் சிறப்பாக்கும் என்பது உண்மை.

Post Top Ad