டயட்' மைய பணி, அரசு பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்படுவதால், அதிருப்தி உருவாகியுள்ளது.மாவட்டந்தோறும், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆய்வு மையங்கள்(டயட்) உள்ளன. அவற்றில், சில ஆண்டுக்கு முன் வரை, ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அதில், 20 மையங்களில், மாணவர் சேர்க்கைகள் நிறுத்தப்பட்டன. அங்கு நியமிக்கப்பட்டிருந்த பேராசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி உள்ளிட்ட பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதற்காக, ஆசிரியர்களுக்கான பயிற்சியை திட்டமிடும் பொறுப்பு, 'டயட்' மையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆண்டுக்கு, 15 நாள் வரை மட்டும் பயிற்சி வழங்கப்படுவதால், மற்ற நாளில், இங்குள்ள பேராசிரியர்களுக்கு, புத்தக தயாரிப்பு, ஆய்வு, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகள், இயக்குனரகத்தால் ஒப்படைக்கப்படுகின்றன.
அதை செய்து முடிக்க, அந்தந்த மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களை, மாற்றுப்பணிக்கு ஈடுபடுத்துகின்றனர்.இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: புத்தக மொழி பெயர்ப்பு என்பது, 'டயட்' மைய பேராசிரியர்களின் பணி. ஆனால், இதை செய்து முடிக்க, 20 ஆசிரியர்கள் வரை, மாற்றுப்பணியில் வரவழைத்து, அவர்களிடம் ஒப்படைக்கின்றனர். இதேபோல், ஒவ்வொரு பணிக்கும், அரசு பள்ளி ஆசிரியர்களே வரவழைக்கப்படுகின்றனர். இதனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணிபுரியும் பள்ளியில், கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.