பள்ளிக்கு 100% தேர்ச்சி வேண்டும்.. டி.சி வாங்கிட்டு கிளம்பு...! ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை - Asiriyar.Net

Friday, January 31, 2020

பள்ளிக்கு 100% தேர்ச்சி வேண்டும்.. டி.சி வாங்கிட்டு கிளம்பு...! ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை




பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி வேண்டும் என்பதால் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவியை பள்ளியை விட்டு ஆசிரியை செல்ல சொன்னதால் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், குழந்தை இயேசு தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இங்கு 12-ம் வகுப்பு வரை சுமார் 2000 மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மதிப்பெண் குறைவாக எடுத்ததால் அப்பள்ளியில் படித்த வந்த மாணவி ஒருவரை தமிழ் ஆசிரியை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் "எங்கள் பள்ளி பொது தேர்வில் 100%தேர்ச்சி பெறவேண்டும். நீ அதை கெடுத்து விடாதே, ஒழுங்கு மரியாதையாக பள்ளியில் இருந்து உன் சான்றிதழை வாங்கி விட்டு சென்று விடு என்றும் தமிழ் ஆசிரியை மிரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி, பள்ளியிலிருந்து வீட்டிற்கு சென்றவுடன் சீருடையோடு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்புக்கு காரணமான பள்ளி தமிழ் ஆசிரியை கைது செய்ய கோரி உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாளையங்கோட்டை காவல் துறையினர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியைகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் இல்லாவிடில் மாணவியின் உடலை வாங்கமாட்டோம் என்று கூறி மாணவியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் தற்போது வரை அந்த ஆசிரியை கைது செய்யப்படாத நிலையில் உறவினர்களும் மாணவியின் உடலை வாங்காமல் தொடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post Top Ad