இன்றைய இளைய தலைமுறை எப்படி உள்ளது ?? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, January 21, 2020

இன்றைய இளைய தலைமுறை எப்படி உள்ளது ??





100 சதவீதம் நம்மைவிட புத்திசாலிகளாக இருக்கிறார்கள். ஏற்க மனம் இல்லை என்றாலும் உண்மை அதுவே. இதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாமல் அறிவியல் பூர்வமாக பகுத்தறிகிறார்கள். மற்றொன்று இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜி வளர்ச்சி. ஆனால் இந்த புத்திசாலித்தனம் ஆக்கபூர்வமாக அவர்களுக்கு பயன்படுகிறதா என்றால் பெரும்பாலான வர்களுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்றைய இளைஞன் தனிமையையே விரும்புகிறான். சதா சர்வகாலமும் செல்போனை பார்த்து கொண்டு மிகப்பெரிய சோம்பேறியாக வலம் வருகிறான். தான் நினைத்தது நடக்க வேண்டும் என்ற எண்ணம். யாரும் தன் முடிவில் தலையிடுவதை விரும்புவதில்லை. சக மனிதர்களுடன் பேசிப்பழக முற்படுவதில்லை.


பணத்தால் வாங்கக் கூடிய விஷயங்கள் எதுவுமே ஒரு குழந்தைக்கு அதிக நேரம் திருப்தியை தராது. குழந்தை ஆசைப்பட்டு ஒன்றை கேட்டாலுமே நம்மால் வாங்கி தர இயலாது. அது நம் தகுதிக்கு மீறியது என்ற உண்மையை கனிவாக புரியும்படி கூறினால் எந்த குழந்தையுமே அதை கேட்டு வம்படிக்காது. பெரிய மனிதன் போல புரிந்து கொள்ளும்.

மாறாக உண்மை நிலையை மறைத்து நம் பொய்யான கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ள ஒரு மாயையான உலகத்தை அக்குழந்தைக்கு சிறுவயது முதல் பழக்கிக் கொடுக்கிறோம். நினைத்தது எல்லாம் கிடைக்கும் என்று ஒரு காலகட்டத்தில் அது நம்பத் தொடங்குகிறது. இதனால் ஒரு சிறு தோல்வியைக்கூட அவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. எனவே தான் நாளுக்கு நாள் தற்கொலைகள் அதிகரிக்கின்றன.

வீட்டு வேலைகளை உங்கள் குழந்தைகளுக்கும் பகிர்ந்து கொடுங்கள். அதை செய்யும் நேரத்தில் இன்னொரு நான்கு பக்கங்கள் படித்து நான்கு மதிப்பெண்கள் கூடப் பெறலாம் என்று எண்ணாதீர்கள். அவர்கள் முதலில் வாழ்க்கையை கற்கட்டும். வாழ்வாதாரம் தானாக வந்தடையும். குழந்தைகள் கேட்பதெல்லாவற்றையும் வாங்கிக் குவிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. உங்கள் "இல்லை"கள் தான் அதற்கு நிஜத்தை கற்றுக்கொடுக்கும்.

Post Top Ad