பொதுத்தேர்வு என்றால், மாணவர்கள் மத்தியில், பதற்றமும், பயமும் தொற்றிக் கொள்கிறது. ஆண்டுதோறும், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது.படிக்கும்போது, பாடம் கடினம்; மதிப்பெண் குறைவு; பேராசிரியர்கள் தொல்லை என, பல்வேறு காரணங்களால், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள், ஆங்காங்கே நடக்கின்றன. இதுபோன்ற நிலை இனியும் வேண்டாம்; எதையும் சாதிக்க முடியும்; அதற்கு தனியாக, &'ரூட்&' போடுங்கள் என, மாணவர்களுக்கு, மன நல மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, சென்னையை சேர்ந்த, மனநல மருத்துவர் ஆனந்த் பிரதாப் கூறியதாவது:பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கடைசி நேரத்தில் மிரட்சி, பயம் ஏற்படுகிறது.
கடைசி நேரத்தில் படித்தால் போதும் என்ற, அலட்சிய எண்ணத்தை கைவிட்டால், எந்த பயமும் தேவையில்லை. கடினமான பாடமாக இருந்தால், தினமும், இரண்டு மணி நேரம் படித்தால் போதும்; எளிதாக புரிந்து விடும். வார நாட்களில் படிக்கும் பாடங்களை, சனி, ஞாயிற்று கிழமைகளில் நினைவு படுத்தி பார்ப்பது, எழுதி பார்ப்பது நல்லது. தொடர்ந்து, நான்கு, ஐந்து மணி நேரத்திற்கு மேல் படித்தல் கூடாது.
அப்படி படிப்பதால், மூளைக்கு களைப்பு மற்றும் அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது.புரியாத பாடத்தை, நன்கு படிக்கும் மாணவர்களிடமோ, ஆசிரியர்களிடமோ கேட்டு, புரிந்து படிக்க வேண்டும்.அதிகாலை, 3:00 மணிக்கு எழுந்து படிப்பது பலன் தராது. அப்போது, துாக்கம் தான் அதிகம் வரும்; படிப்பில் கவனம் இருக்காது. எனவே, காலை, 6:00 முதல், 7:30 மணி வரை படித்தால் போதும்.பெற்றோர், வீட்டில் சீரியல் பார்ப்பது, வெளியூர் செல்வது, அடிக்கடி சண்டையிடுவது, தந்தை மது அருந்துவது போன்றவை மாணவர்களின் மனநிலையை பாதிக்கும். மாணவர்கள் படிக்க, பெற்றோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.அதற்காக, படிக்கும் போது, அடிக்கடி, டீ, காபி கொடுத்து, தொந்தரவு செய்ய வேண்டாம்.
அடிக்கடி டீ, காபி கொடுப்பதால், கவனக்குறைவு ஏற்படும். அதேபோல, மாலை, 6:00 முதல், 9:00 மணி வரை, எந்த பொழுது போக்கிலும் ஈடுபடக்கூடாது. அந்த நேரங்களில் படிக்கலாம். தேவைப்பட்டால், நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.தேர்வு நெருக்கத்தில், நண்பர்களுடன் சென்று படிக்கலாம் என்பதை தவிர்க்க வேண்டும்.
கடைசி நேரத்தில் படித்தால் போதும் என்ற, மனநிலையில் இருக்க கூடாது.படிக்கும் மாணவர்கள் குறிப்பாக, சாக்லெட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதில், &'டைரோசின்&' என்ற கெமிக்கல் இருப்பதால், ஞாபக சக்தி குறைபாடு ஏற்படும். தாழ்வு மனப்பான்மை இல்லாமல், தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும், அதில் நம்மால் சாதிக்க முடியும் என்பதை உணருங்கள்.
இவ்வாறு, அவர் கூறினார்.கீழ்பாக்கம் மனநல காப்பக பேராசிரியர் வெங்கடேஷ் மதன்குமார் கூறியதாவது:பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், படிக்கும் போது, புரிந்து படிக்க வேண்டும். நடைபயிற்சி, யோகா உள்ளிட்டவற்றால், ஞாபக சக்தி அதிகரிக்கும். இதுவரை படிக்காமல் இருப்போர், கடைசி நேரத்தில் படிக்கும் போது, தகுதி மதிப்பெண் அளவிற்கு படித்தால் போதும்.தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன், பதற்றம் ஏற்படும் பட்சத்தில், அவர்கள் உரிய டாக்டரிடம் கவுன்சிலிங் பெறுவது அவசியம். தேர்வில் ஏற்படும் தோல்வி, வாழ்க்கையின் இறுதி என்று நினைக்கக்கூடாது.
அதன்பின், சாதிப்பதற்கு நிறைய வழிகள் உள்ளன. மாணவர்கள் சரியான, &'ரூட்&' போட்டுவிட்டால் போதும். வரும் புத்தாண்டில், பிற்போக்கான எண்ணங்களை விட்டு, நேர்மறையாக சிந்தியுங்கள்; வாழ்வில் எல்லாம் எளிதாகும். இவ்வாறு, அவர் கூறினார்.