பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
மக்கள் தனியார் பள்ளிகளை நோக்கிப் படையெடுக்கும் காலகட்டத்தில், உள்கட்டமைப்பு வசதியில் சிறந்து விளங்கும் எங்கள் ஊர் அரசுப் பள்ளிகுறித்து இங்கு பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதே என் ஆசை.
திருப்பூர் வடக்கு பூலுவபட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், தற்போது 610 மாணவ மாணவியர் பயில்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக 200+ சேர்க்கையில் ஹேட்ரிக் சாதனை செய்துள்ளனர்.பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி
2016-ம் ஆண்டில் 270 ஆக இருந்த பள்ளியின் எண்ணிக்கை தற்போது 610 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளாகப் பள்ளியின் சார்பில் அனைவருக்கும் காலண்டர் வழங்கப்படுகிறது.
2016-ம் ஆண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்த, முதலில் 7 லட்சம் ரூபாய் செலவில் கிரானைட் தரை அமைத்தனர். பின்னர், அருகிலுள்ள எஸ்.டி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் ஐந்து வகுப்பறைக்கும் ஸ்மார்ட் க்ளாஸ்,17 கணினிகளுடன் ஆய்வகம் அமைய உதவினர்.
அடுத்ததாக, தனியார் பள்ளிகளைப் போல ஐந்தாண்டுகளாக விளையாட்டுக்கு வண்ணச் சீருடை, கணினி வகுப்பு,ஓவியம், சிலம்பம், பரதம், கராத்தே மற்றும் பறை இசை கற்றுத்தருகின்றனர்.பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி
வீட்டுப்பாடங்களை பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் டைரி மூலம் தகவல் அளிக்கின்றனர்.
இந்த ஆண்டு, வகுப்பறைக்கு வண்ணம் தீட்டுதலில் தன்னார்வலர்களின் உதவியுடன் ஓவியர்களைக் கொண்டு ஒன்றரை லட்ச ரூபாய் செலவில் சுவர் ஓவியங்கள் வரைந்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைத்தான் முதலில் பெற்றோர் பார்க்கின்றனர். அதைச் சரிசெய்யும் முயற்சியில் இறங்கிய இப்பள்ளி ஆசிரியர்கள், அதில் வெற்றியும் கண்டுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் பள்ளியில் செய்த சிறப்புகளைக் குறிப்பிட்டு, வருடாந்தர காலண்டர் ஒன்றை அச்சிட்டு மாணவர்கள் அனைவருக்கும் கொடுத்துவருகின்றனர்.
ஒவ்வோர் வருடமும் அந்த ஆண்டு பள்ளியின் சார்பில் செய்த சாதனைகள், மாணவ மாணவியரின் குழு புகைப்படம் என அனைத்துமே அந்தக் காலண்டரில் இடம்பெற்றிருக்கும். மாணவ மாணவியர் மட்டுமில்லாது, தன்னார்வலர்களும் பொதுமக்களும், பெற்றோரும் காலண்டர் வெளியிடுவதை ஆவலாக எதிர்பார்க்கின்றனர். ஒவ்வொரு முறை காலண்டரை குழந்தைகள் பார்க்கும் போதும் இது, தன் பள்ளி என்கிற பெருமித உணர்வு ஏற்படுவதாகக் கூறுகின்றனர். மேலும், ஒவ்வொரு குழந்தைகள் தினத்தை முன்னிட்டும் குழந்தைகளுக்கான சர்வதேச திரைப்பட விழாக்களையும் நடத்துகிறார்கள்.
அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை இதுபோன்ற சிறப்பு வகுப்புகள், கட்டமைப்புகள், புதுமைகளைத்தான் பெற்றோர்கள் முதலில் விரும்புகின்றனர். அதுபோன்ற விருப்பத்தை நிறைவு செய்யும் அரசுப் பள்ளிகள் சாதிக்கின்றன.பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி
2017ல், தமிழக அளவில் திருப்பூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாகவும், இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதை இப்பள்ளி தலைமையாசிரியை ஆரோக்கிய ஜாஸ்மின் மாலா பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.