TET சான்றிதழ் இது போன்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்வு எழுதியவரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்ச்சி பெற்ற தாள், விருப்பப் பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு ஆகிய இரண்டுத் தேர்வுகளிலும் உரிய தகுதிகளோடு வெற்றி பெற்ற சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வேறு யாரும் இந்தச் சான்றிதழ்களை அச்சிடாதவாறு ரகசிய பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சான்றிதழில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற பேரில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சென்றுள்ளனர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு வாழ்நாள் முழுவதும் இந்தச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.
தமிழிலேயே விவரங்கள்: ஆசிரியர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இனி அந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
'டெட்' தேர்ச்சி பெற்ற தேர்வர்கள், அதற்கான தகுதிச் சான்றிதழ்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின், www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில், 02.02.2026 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment