Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, February 24, 2026

 ஆசிரியர் மீது பொய் புகார் - ஆசிரியைகள், அதிகாரிகளுக்கு சிறை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 



அரசு பள்ளி ஆசிரியர் மீது போலியாக பாலியல் புகார் தெரிவித்து பணி நீக்கம் செய்த மாவட்ட கல்வி அலுவலர், இரண்டு ஆசிரியைகள் ஆகியோருக்கு தலா மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தனித்தனியே சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் மயிலாடும்பாறை அருகே நரியூத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்தவர் கோகிலபாண்டியன். இதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியைகள் சிலர் கோகிலபாண்டியனுக்கு எதிராக பாலியல் புகார் அளித்தனர். இதனடிப்படையில் 2016 செப்.16-ம் தேதி கோகிலபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


இதை தொடர்ந்து தன்மீது முன்விரோதம் காரணமாக பாலியல் புகார் அளிக்கப்பட்டதாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.


நீதிமன்ற உத்தரவின்படி விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. இதில் சத்துணவு அமைப்பாளர் நந்தினியின் பெயரில் கோகிலபாண்டியனுக்கு எதிராக போலியான ஆவணம் தயாரித்து, ஆசிரியைகள் வனிதா மற்றும் ராமலட்சுமி ஆகியோர் பொய் புகார் அளித்தது உறுதியானது.


இதில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில், கோகிலபாண்டியனின் தற்காலிக பணி நீக்கம், பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டது.


இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.


விசாரணை முடிந்த நிலையில் நீதித்துறை நடுவர் பாசில்முகமது தீர்ப்பளித்தார். இதில், மாவட்டக் கல்வி அலுவலர் மொக்கத்துரை, ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகிய 3 பேருக்கும் தலா மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொரு மாவட்டக் கல்வி அலுவலர் கணேஷுக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் அளித்து உத்தரவிட்டார்.


மேலும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த முனியாண்டி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஸ்ரீதேவி மற்றும் ஹெலன் மெட்டில்டா ஆகிய 3 பேருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கோகிலபாண்டியன், தற்போது ஆண்டிபட்டி ராஜகோபாலன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.


No comments:

Post a Comment

LightBlog