தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் மகேஷ் அழைப்பு! - Asiriyar.Net

Tuesday, November 5, 2024

தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் மகேஷ் அழைப்பு!

 




வளர்மதி ஆசிரியர் போன்று ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் எனக்கு வெளிப்படையான சவால் விட வேண்டும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார்.


அரசு பள்ளிகளில் குறைகள், நிறைகள் கண்டறிய 234/77 என்ற திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை தொடங்கி இருக்கிறது. அதன்படி, அமைச்சர் மகேஷ் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 


இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதி ஆனேகொள்ளு ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி என்பவர், எங்கள் பள்ளியில் ஆய்வு செய்ய வருமாறு அமைச்சர் மகேஷூக்கு அழைப்பு விடுத்தார்.


தலைமை ஆசிரியர் வளர்மதி கோரிக்கையை ஏற்று, அமைச்சர் மகேஷ் தொடக்கப்பள்ளிக்கு வந்து, மாணவர்கள் கற்றல், வாசிப்புத்திறன்களை ஆய்வு செய்தார். மாணவர்களிடமும் கலந்துரையாடினார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது:


தளி தொகுதி என்னால் மறக்க முடியாத தொகுதியாக தான் இருக்கிறது. டி.புதூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி எங்கள் ஊருக்கு வாருங்கள், பள்ளியில் ஆய்வு நடத்துங்கள் என்று சமூக வலைதளத்தில் மிக பெரிய அழைப்பை விடுத்திருந்தார். ஒரு தலைமை ஆசிரியர், அமைச்சருக்கு விடுக்கும் ஓபன் சேலன்ஜ் மாதிரி தான் இது.


நானும் அழைப்புக்கு நன்றி கூறினேன். விரைவில் வருவேன் என்று சொல்லி இருந்தேன். இன்று (நவ.5) பள்ளிக்கு வந்துவிட்டேன். எப்படி வளர்மதி தலைமை ஆசிரியர் எனக்கு அழைப்பு விடுத்தார்களோ, அது போல் தொடக்கப்பள்ளி என்று மட்டும் இல்லை, எல்லா நிலையில் இருக்கின்ற தலைமை ஆசிரியர்கள் இதுபோன்ற ஒரு அழைப்பை எனக்கு விட வேண்டும்.


அரசுப்பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்று சொல்லும் போது அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது. ஒரு வளர்மதி ஆசிரியர் மட்டும் போதாது, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் வளர்மதி ஆசிரியராக மாற வேண்டும். அதுபோன்ற அழைப்பை நீங்களும் வரும்காலத்தில் விடவேண்டும்.


இவ்வாறு அமைச்சர் மகேஷ் கூறினார்.


No comments:

Post a Comment

Post Top Ad