மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பயிற்சி வகுப்பை, அலுவலர்கள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு வரும், 19ல் நடக்கிறது, இதில் ஓட்டுச்சாவடியில் பணியாற்றுவோருக்கான பயிற்சி வகுப்பு, மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது.
அவ்வகையில் நேற்று காலை ஒத்தக்கால்மண்டபம் அருகேயுள்ள, தனியார் இன்ஜி., கல்லூரியில் பயிற்சி வகுப்பு துவங்கியது. ஹிந்து சமய அறநிலையத்துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த, ஆயிரத்து 300 பேர் பங்கேற்றனர்.
மதியம், 1:30 மணிக்கு மதிய உணவுக்காக பயிற்சி நிறுத்தப்பட்டது. பங்கேற்றோர் உணவுக்காக காத்திருந்தனர். ஆனால் உணவு ஏற்பாடு செய்யப்படவில்லை. ஜோனல் அலுவலர்களுக்கு மட்டும் உணவு வந்தது.
அதிர்ச்சியடைந்த பங்கேற்பாளர்கள், மதிய வகுப்பை புறக்கணித்து வீட்டுக்கு செல்ல தயாராகினர். தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, உணவு ஏற்பாடு செய்யாததற்கு வருத்தம் தெரிவித்தார்.
அத்துடன், 150 பேருக்கு உடனடியாக உணவு ஏற்பாடு செய்தார். ஆனால், உணவு தாமதமாக வந்ததாகக்கூறி உட்கொள்ள மறுத்த அலுவலர்கள், மதிய வகுப்பை புறக்கணித்து வெளியே உட்கார்ந்தனர். மாலை, 4:30 மணிக்கு அனைவரும் புறப்பட்டு சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பங்கேற்றவர்கள் சிலர் கூறுகையில், 'எங்களால் உணவு வாங்கி சாப்பிட முடியாமல் இல்லை. அக்கல்லூரியில் கேன்டீன் வசதியும் கிடையாது. சுமார் ஒரு கி.மீ., தூரம் நடந்து வந்துதான் சாப்பிட வேண்டிய நிலை. பசி தாங்க முடியவில்லை. எங்களில் பலர் சர்க்கரை, ரத்த அழுத்த நோய்களுக்கு மாத்திரை சாப்பிடுபவர்கள்.
தாழ்நிலை சர்க்கரை நோயாளிகளால், பசி தாங்க முடியாது. பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு மதிய உணவை கூட, ஏற்பாடு செய்யாமல் அலட்சியம் காட்டினர். வரும் நாட்களில் இது போல் நடக்கக்கூடாது என்பதற்காக, பயிற்சியை புறக்கணித்தோம்' என்றனர்.
No comments:
Post a Comment