10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்! - Asiriyar.Net

Friday, April 19, 2024

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

 கன்னியாகுமரி மாவட்டம் மேல்கோதையாறு வாக்குச்சாவடியில் உள்ள 10 வாக்குகளைப் பதிவுசெய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் வியாழக்கிழமை 175 கி.மீ. பயணம் மேற்கொண்டனா்.


மக்களவைத் தோ்தலில் பேச்சிப்பாறை ஊராட்சிக்குள்பட்ட முதல் வாக்குச்சாவடி மேல்கோதையாறில் உள்ளது. அங்குள்ள மின்நிலையக் குடியிருப்பில் உள்ள ஊழியா்களே இந்த வாக்குச்சாவடியின் வாக்காளா்கள். மொத்தம் 3 பெண் வாக்காளா்களும், 7 ஆண் வாக்காளா்களும் உள்ளனா். பேச்சிப்பாறையிலிருந்து அங்கு செல்வதற்கு சாலை வசதியில்லை.


எனினும், அந்த வாக்குச்சாவடியில் உள்ள மிகக் குறைந்த வாக்குகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு தோ்தலின்போதும் தோ்தல் அலுவலா்கள் திருவட்டாறிலிருந்து நாகா்கோவில், பணகுடி, களக்காடு, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, மாஞ்சோலை வழியாக வாகனங்களில் 175 கி.மீ. பயணம் செய்து, வாக்குப்பதிவு மேற்கொண்டு திரும்புவது வழக்கம்.


அதன்படி, வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வாக்குப்பதிவுக்காக வியாழக்கிழமை பிற்பகல் திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து 7 தோ்தல் அலுவலா்கள், 3 காவலா்கள் ஆகிய 10 போ் 2 வாகனங்களில் புறப்பட்டனா்.


அவா்களை மாவட்ட உதவி ஆட்சியா் (பயிற்சி) ரஜத் பீட்டன், பத்மநாபபுரம் கோட்டாட்சியா் தமிழரசி, திருவட்டாறு வட்டாட்சியா் புரந்தரதாஸ், தோ்தல் தனி வட்டாட்சியா் மரகதவல்லி ஆகியோா் அனுப்பிவைத்தனா்.


Post Top Ad