அரசு ஊழியர்கள் ஆதங்கம் - அரசாணையை வாபஸ் பெற்றது தமிழக அரசு! - Asiriyar.Net

Saturday, April 20, 2024

அரசு ஊழியர்கள் ஆதங்கம் - அரசாணையை வாபஸ் பெற்றது தமிழக அரசு!

 




அரசு அலுவலர்களை கட்டாய வாக்களிக்க உத்தரவிட கோரிய அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று (ஏப்ரல் 19) வாபஸ் பெற்றுள்ளது.


தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் இன்று (ஏப்ரல் 19) நடைபெற்று வருகிறது.


இதனையொட்டி தமிழ்நாடு அரசு உள்துறை செயலர் அமுதா நேற்று ஒரு அதிரடி உத்தரவினை அரசாணையாக  வெளியிட்டார்.


வாக்களிக்க தவறினால் விடுமுறை கிடையாது!


அதன்படி “உள்துறை, மதுவிலக்கு (ம) ஆயத் தீர்வைத் துறையின் அனைத்து ஊழியர்களும் தவறாமல் வாக்களிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைத்து இரண்டாம் நிலை அலுவலர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பணியாளர்கள் முறையாக வாக்களிப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இல்லையென்றால், அதாவது தங்களது வாக்கினை செலுத்தாதப் பணியாளர்களின் விவரங்களை, அப்பணியாளர்களின் விடுப்புக் கணக்கிலிருந்து தற்செயல் / ஈட்டிய விடுப்பினை கழிப்பதற்கு ஏதுவாக, அலுவலக நடைமுறைப் பிரிவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


தேர்தலில் கட்டாய வாக்களிக்க கோரும் அரசின் இந்த உத்தரவு அரசு அலுவலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் அரசின் உத்தரவை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் சார்பில் அரசு முதன்மை செயலர் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு இன்று (ஏப்ரல் 19) கடிதம் எழுதப்பட்டது.


அரசியல் அமைப்பிற்கு எதிரானது!

அதில், “தமிழ்நாடு உள்துறை அரசு முதன்மைச் செயலாளர் அமுதா நேற்று  வெளியிட்டுள்ள அலுவலக ஆணையில் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் 19.04.2024 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை அறிவித்துள்ளது என தெரிவித்துள்ளார்.


மேலும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள பொது விடுமுறைக்கு எதிராக, வாக்களிக்காத பணியாளர்களுக்கு 19.04.2024 அன்று வழங்கப்பட்ட பொது விடுமுறையினை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.


அரசு உள் துறை முதன்மைச் செயலாளரின் இந்த அலுவலக ஆணையானது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானதாகும். அரசின் முதன்மைச் செயலாளராக இருக்கும் இந்திய ஆட்சிப் பணி அலுவலரின் இந்த அலுவலக ஆணையானது இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரானதாகும்.




அதிகார துஷ்பிரயோகமான செயல்!


இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள தனிநபர் அடிப்படைச் சுதந்திரத்தில் தலையிடும் செயலாகும்.


தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையே வாக்களிக்க யாராலும் கட்டாயப்படுத்தவோ நிர்பந்தப்படுத்தவோ முடியாது என்ற சூழ்நிலையில், தனது கீழ் பணியாற்றும் அரசு பணியாளர்களை, தான் வகிக்கும் அரசு முதன்மைச் செயலாளர் என்ற பதவியினை வைத்து எதேச்சை அதிகார தொனியில், அதுவும் வாக்களிக்கத் தவறினால் அதற்காக வழங்கப்பட்ட அரசு பொது விடுமுறையினை அனுமதிக்க இயலாது – விடுப்புக் கணக்கில் கழிக்கப்படும் என ஆணையிடுவது என்பது அதிகார துஷ்பிரயோகமான செயல்.


மன உளைச்சலில் அரசு ஊழியர்கள்!


தேர்தலில் வாக்கினைச் செலுத்துவதற்கு அரசுப் பணியில் எந்தவொரு உயர் நிலையில் இருந்தாலும் தங்களுக்குக் கீழ் பணியாற்றும் பணியாளர்களை, யாரும் யாருக்கும் ஆணையிடவும் கட்டாயப்படுத்தவும் முடியாது. அதோடு மட்டுமல்லாமல், தேர்தல் வாக்கு செலுத்த விருப்பமில்லை என பதிவிடுவதற்கு 49-0 என இந்திய தேர்தல் ஆணையமே வாக்காளர்களுக்கு உரிமையினை வழங்கியிருக்கிறது.


மேலும், இந்திய அரசியலமைப்பு இந்திய குடிமகனுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையான, வாக்களிப்பதையும் யாருக்கு வாக்களித்தோம் என்பதையும் வாக்கு அளித்தோமா-இல்லையா என்பதையும் எந்த அதிகார ஆணையினாலும் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட முடியாது. உள் துறை அரசு முதன்மைச் செயலாளரின் இந்த அலுவலக ஆணையினால் பணியாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆட்பட்டு உள்ளனர்.


ஆணையை உடனடியாக ரத்து செய்க!


தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தினைப் பொறுத்தவரையில் 100 விழுக்காடு வாக்களிப்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், அதனை ஒரு அதிகார ஆணையினால் செயல்படுத்த நினைப்பதையும் அதிகார வரம்பிற்கு மீறி செயல்படுத்த முயல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.


வாக்காளர்களைப் பொறுத்தவரையில், அரசுப் பணியில் இருந்தாலும், அவர்களை இந்திய நாட்டின் குடிமகனாகத்தான் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு பணியாளர்களும் தங்களது கடமையினை நினைவில் கொண்டு, இதுநாள்வரை ஜனநாயகக் கடமையான வாக்குப் பதிவினை செலுத்தி வருகின்றனர்.


தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக, உள்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள அலுவலக ஆணையினை உடனடியாக ரத்து செய்யுமாறும், அவர்மீது தக்க நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


மேலும், உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வைத் துறைப் பணியாளர்கள் அச்சமின்றி தங்களது வாக்குப் பதிவினை செலுத்துவதை உறுதி செய்யுமாறும் இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள தனிநபர் அடிப்படைச் சுதந்திரத்தினை காத்திடவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து தற்போது அரசு பணியாளர்களை கட்டாய வாக்களிக்க கோரும் உத்தரவினை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றுள்ளது.


இதுதொடர்பாக வெளியிட்ட அரசாணையில், “மக்களவைத் தேர்தலையொட்டி அரசு அலுவலர்களுக்கு  வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது



No comments:

Post a Comment

Post Top Ad