லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவில் பெரும்பாலான ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் சொதப்பியதாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தமிழகத்தில், கடந்த, 19ல் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிந்தது. 19 இரவு, 7:00 மணிக்கு, தமிழகத்தில், 72.09 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.
அடுத்த நாள் இறுதியாக கணக்கிட்டு கூறும்போது, 69.46 சதவீதம் தான் தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நடந்திருப்பதாக தெரிவித்தார். முதல் நாள் குறிப்பிட்ட சதவீதத்திற்கு அதிகமாகத்தான் இறுதி கணக்குகள் வருவது வழக்கம். குறைந்தாலும் கூட மிக குறைவாகத்தான் இருக்கும். இந்தளவுக்கு குறைந்ததற்கான காரணம் குறித்து அரசியல் கட்சிகள் சந்தேகம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஓட்டுப்பதிவு குறித்த விபரங்களை கணக்கிடும்போது பல இடங்களில் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் சொதப்பியதாக, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: வழக்கமாக, ஓட்டுச்சாவடி தலைமை அலுவலராக, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தான் நியமிக்கப்படுவர்.
அவர்கள் ஏற்கனவே, பி1, பி2, பி3 நிலையில் பலமுறை பணியாற்றிய அனுபவம் இருக்கும். ஆனால், இந்தமுறை தேர்தல் அனுபவம் இல்லாத, பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர துறையை சேர்ந்த பணியாளர்களை ஓட்டுச்சாவடி தலைமை அலுவலராக நியமித்திருந்தனர்.
அவர்கள், ஓட்டு இயந்திரங்களை சரிபார்ப்பது முதல் தேர்தல் ஆவணங்களை பூர்த்தி செய்வது வரை பல இடங்களில் சொதப்பினர். இதனால் பல ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பெட்டிகளை எடுத்து செல்லவே காலதாமதமானது.
ஓட்டுப்பெட்டிகளை எடுத்துச்செல்ல மண்டல அலுவலர்கள் வரும்போது, இவர்கள் ஓட்டுப்பதிவிற்கான பல ஆவணங்களை பூர்த்தி செய்யாமல் தடுமாறிக்கொண்டிருந்தனர்.
இதனால், மண்டல அலுவலர்கள் அடுத்த ஓட்டுச்சாவடிக்கு சென்றுவிட்டனர். ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் சரியாக செயல்படாததால் அங்கு பணியாற்றிய மற்ற ஆசிரியர்கள், பணியாளர்கள் முக்கியமாக பெண் ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இரவு மிகவும் தாமதமாக பெட்டிகளை ஒப்படைத்து வீட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதற்கு முக்கிய காரணம், தேர்தல் அனுபவம் இல்லாத ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் தான். அடுத்த தேர்தலிலாவது இதுபோன்ற தவறுகளை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment