'டிஜிட்டல்' பாடம் - ஆசிரியர்களுக்கு புதிய பணி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, April 8, 2024

'டிஜிட்டல்' பாடம் - ஆசிரியர்களுக்கு புதிய பணி

 



அரசு நடுநிலை பள்ளிகளில், 'டிஜிட்டல்' வழி கற்பித்தலுக்கு முக்கியத்துவம் தருமாறு, அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில் உள்ள 38,000த்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில், மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது. பல பள்ளிகளில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் பணியில் இருப்பதால், கற்பித்தல் பணியை மேம்படுத்த முடியவில்லை.


மூட நேரிடும்


இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தால் மட்டுமே, அரசின் சார்பில் நலத்திட்டங்களும் கொண்டு வர முடியும் என்ற நிலை உள்ளது.


மாணவர் சேர்க்கை குறைந்து விட்டால், பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்படும். நலத்திட்டங்களை கொண்டு வர முடியாது.


நிதி ஒதுக்கீடும் குறைந்து விடும்; இது ஆளுங்கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும்.


இதை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


நேற்று முன்தினம் வரை, 3 லட்சத்துக்கும் மேல், புதிய மாணவர்கள் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை வரும் 12ம் தேதிக்குள், நான்கு லட்சமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


புதிய கல்வி ஆண்டில் மொத்தம், 5.5 லட்சமாக மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதையொட்டி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களும், தங்கள் பள்ளி இருக்கும் பகுதிகளில் பெற்றோரை சந்தித்து, மாணவர்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய அவசியம், அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


கையடக்க கணிணி


அதேநேரத்தில், அரசு நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும், 51,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, கையடக்க கணினிகள் வழங்கப்பட உள்ளன. 'ஹைடெக்' ஆய்வகம், 'ஸ்மார்ட்' வகுப்பறை ஆகியவற்றுக்கான உபகரணங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.


இந்நிலையில், அரசு கொள்முதல் செய்துள்ள உபகரணங்களை பயன்படுத்தும் வகையில், பள்ளிகள் தயாராக வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை செயலர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.


மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவரே நேரடியாக, 'குரல் வழி தகவல்' அனுப்பியுள்ளார். அதில், 'ஒவ்வொரு பள்ளியிலும், டிஜிட்டல் வழி பாடம் நடத்தும் வகையில், பிராட்பேண்ட் இணையதள இணைப்பை பெற முயற்சிக்க வேண்டும்.


வரும் கல்வி ஆண்டுக்குள் இந்த பணிகளை முடிக்க, தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.


Post Top Ad