சத்துணவு அமைப்பாளர் பணி; கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, November 14, 2023

சத்துணவு அமைப்பாளர் பணி; கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

 



கருணை அடிப்படையில் பணி வழங்க கோரிய பெண்ணுக்கு, சத்துணவு திட்ட அமைப்பாளர் பணி வழங்கும்படி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மனைவி கோமதி. இவரது தாய், பால்வார்த்துவென்றான் தொடக்கப்பள்ளியில், 2006ல் சத்துணவு சமையலராக பணி அமர்த்தப்பட்டார்.


பணியில் இருந்தபோது, 2017 ஆக.,8ல் மரணம் அடைந்தார்.


கருணை அடிப்படையில் வேலை கேட்ட கோமதிக்கு, 2021 ஆக.,9ல் சமையலர் பணி வழங்கி உத்தரவிடப்பட்டது.


இந்நிலையில், 'சத்துணவு அமைப்பாளர் பணி வழங்கக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், சமூக நலத்துறை துணை செயலர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்தும் பரிசீலிக்கவில்லை.


'எனவே, மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோமதி மனு தாக்கல் செய்தார்.


மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார்.


மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.தமிழ்ச்செல்வன் ஆஜரானார்.


இருதரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:


பெண் சமையலர் அல்லது சமையல் உதவியாளர் மரணம் அடைந்தால், அவரது வாரிசுக்கு சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க வேண்டும் என, 2019 ஜூன், 17ல்அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


மனுதாரர் 2021 ஆக., 9ல் நியமிக்கப்பட்டுள்ளார்; 2017 அக்.,9ல் விண்ணப்பித்துள்ளார்; அரசாணை 2019 ஜூன், 17ல் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


எனவே, 2019ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்கீழ், சலுகை கோர முடியாது என்ற அரசு தரப்பு வாதம் ஏற்புடையது அல்ல.


எனவே, போளூர் தாலுகாவில் காலியாக உள்ள, 53 பணியிடங்களில், ஏதாவது ஒரு இடத்தில், மனுதாரரை எட்டு வாரத்தில் சத்துணவு அமைப்பாளராக நியமித்து, மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.


இவ்வாறு அதில் உத்தரவிட்டுள்ளது.


Post Top Ad