அரசு பள்ளி ஆசிரியர் பதவி கல்வி தகுதியில் மாற்றம் - Asiriyar.Net

Tuesday, November 14, 2023

அரசு பள்ளி ஆசிரியர் பதவி கல்வி தகுதியில் மாற்றம்

 அரசு தொடக்க பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர் பணியில் சேர, இனி, டிப்ளமா கல்வியியல் படிப்பு கட்டாயம் படித்திருக்க வேண்டும் என, விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்களை நியமிக்க, தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், பணி விதிகள் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.


கடந்த, 2020ல் இந்த சட்டம் புதுப்பிக்கப்பட்டது.


இதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும், இடைநிலை ஆசிரியர்; 6 முதல் 8ம் வகுப்பு வரை பணியாற்றும் நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்; 6 முதல், 10ம் வகுப்பு வரை பணியாற்றும் உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்; பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், முதுநிலை ஆசிரியர் என, தனித்தனி பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.


இதில், 1 முதல், 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு, பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்புடன், தொடக்க கல்விக்கான டி.எல்.எட்., அல்லது பி.எல்.எட்., அல்லது பி.எட்., படிப்பு முடித்தவர்கள், தகுதி பெறுவர் என, அறிவிக்கப்பட்டிருந்தது.


இதில், பட்டப்படிப்புடன், பி.எட்., படித்தவர்கள் தகுதி பெறுவர் என்ற விதியை நீக்கி, தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய அரசாணை பிறப்பித்து உள்ளது.


இதன்படி, பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்கள், அதனுடன், டி.எல்.எட்., என்ற தொடக்க கல்வி டிப்ளமா படிப்போ அல்லது, பி.எல்.எட்., என்ற நான்காண்டு ஆசிரியர் கல்வியியல் படிப்போ முடித்திருக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.


மேலும், ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' தேர்வின் முதல் தாளில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


எனவே, வருங்காலங்களில் பி.எட்., முடித்த பட்டதாரிகள், தொடக்க கல்வி டிப்ளமா படிக்காமல், இடைநிலை ஆசிரியர் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


Post Top Ad