ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினி வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, November 28, 2023

ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினி வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு

 தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணிகளுக்காக கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவா்களுக்கு கற்பித்தலை முன்னெடுக்க பள்ளிகளில் கணினி ஆய்வகம், மொழி ஆய்வகம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


அதன் தொடா்ச்சியாக தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணிகளுக்காக கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்குவதற்கு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதற்காக 79,723 டேப்லெட்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் கோரப்பட்டுள்ளது. பொதுவாக மடிக்கணினி, டேப்லெட் போன்ற எண்ம சாதனங்கள் தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலமாக கொள்முதல் செய்யப்படும். ஆனால், இந்தமுறை வெளி நிறுவனங்களிடம் நேரடியாக டேப்லெட்களை பள்ளிக் கல்வித் துறை கொள்முதல் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோல், இந்த கையடக்கக் கணினியில் பாடக்குறிப்பேடுகள், எண்ணும், எழுத்தும் சாா்ந்த பயிற்சி கையேடுகள், காணொலிகள் உள்ளிட்ட கல்விசாா்அம்சங்கள் பதிவேற்றப்பட்டு ஆசிரியா்களுக்கு வழங்கப்படும். அதைக் கொண்டு குழந்தைகளுக்கு கற்பித்தல் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. மேலும், இதன்மூலம் ஆசிரியா்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்கவும் முடியும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.


Post Top Ad