அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டிக்குள் மனிதக் கழிவை கலந்த அவலம் - காவல் துறையினர் விசாரணை - Asiriyar.Net

Tuesday, November 21, 2023

அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டிக்குள் மனிதக் கழிவை கலந்த அவலம் - காவல் துறையினர் விசாரணை

 




காஞ்சிபுரம் அருகே உள்ள அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த திருவந்தவார் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.


இந்தப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியைதான் மாணவர்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொட்டியில் இருந்து இன்று பிற்பகல் மதிய உணவுக்காக தண்ணீரை பிடித்து குழந்தைகளுக்காக சமைத்துள்ளனர்.


அப்போது குடிநீரில் துர்நாற்றம் வீசியதால் மாணவர்களுக்கு உணவு வழங்காமல், உடனடியாக காவல் துறையினருக்கு பள்ளி ஆசிரியர்கள் தகவல் அளித்தனர்.


இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காஞ்சிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர், உத்திரமேரூர் வட்டாட்சியர் ஞானவேல் உள்ளிட்டோர் விசாரணை நடத்தியதில் குடிநீர்த் தொட்டிக்குள் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.


இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad