அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டிக்குள் மனிதக் மலம் கலக்கப்பட்டதா? - மாவட்ட கலெக்டர் விளக்கம் - Asiriyar.Net

Wednesday, November 22, 2023

அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டிக்குள் மனிதக் மலம் கலக்கப்பட்டதா? - மாவட்ட கலெக்டர் விளக்கம்

 



காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே திருவந்தவார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்துள்ளதா என கலெக்டர் கலைச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


உத்திரமேரூர் ஒன்றியம்திருவந்தவார் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 96 மாணவர்கள் படிக்கின்றனர்.


நேற்று காலை 10:00 மணிக்கு பள்ளி சமையலர் கண்ணகி என்பவர், பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடித்து வந்து உணவு சமைத்துள்ளார். அப்போது தண்ணீரில் துர்நாற்றம் வீசியது. குடிநீர் தொட்டி தண்ணீரில் காய்கறிகளை சுத்தம் செய்த போதும், அதிக வாடை வீசியதால் சந்தேகம் அடைந்தார்.தண்ணீர் தொட்டியை சோதித்த போது, முட்டை வடிவில் மஞ்சள் நிறத்தில் ஏதோ மிதந்ததை பார்த்துள்ளார். இதையடுத்து ஆசிரியர்கள் வந்து பார்த்த போது குடிநீரில் மனித மலம் மிதப்பது தெரியவந்துள்ளது. தொட்டியில் இருந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டு சமைத்த உணவையும் புதைத்தனர். பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.


கலெக்டர் கலைச்செல்வி, எஸ்.பி., சுதாகரன், ஆர்.டி.ஓ., ரம்யா மற்றும் பள்ளி கல்வித் துறை அலுவலர்களும் வந்து ஆய்வு செய்தனர்.


பின்னர் கலெக்டர் கலைச்செல்வி கூறியதாவது:


குடிநீர் தொட்டியில் அழுகிய, ஓட்டை விழுந்த ஒரு முட்டையை காகம் தூக்கி வந்து போட்டிருக்கலாம் என தெரிகிறது.


அந்த அழுகிய முட்டையின் நாற்றம், சமையல் மற்றும் சத்துணவு பணியாளர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது.


இப் பள்ளிக்கு புதியதாக குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வினியோகிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Post Top Ad