தலைமையாசிரியர்களுக்கு என்ன பொறுப்பு? - எதன் அடிப்படையில் பண பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுகிறது? - உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி - Asiriyar.Net

Wednesday, November 29, 2023

தலைமையாசிரியர்களுக்கு என்ன பொறுப்பு? - எதன் அடிப்படையில் பண பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுகிறது? - உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி

 



பள்ளி நேரத்திற்குப் பின் இரவில் தலைமையாசிரியர்கள் எப்படி லேப்டாப்களை பாதுகாக்க முடியும், சட்டத்தின் எந்த விதியின் கீழ் அவர்களுக்கு பொறுப்பு உள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது.


மதுரை மாவட்டம் தாடையம்பட்டி கள்ளர் சீரமைப்பு மேல்நிலை பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தவர் கலைச்செல்வி. மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக பள்ளி பாதுகாப்பு அறையில் லேப்டாப்கள் வைக்கப்பட்டிருந்தன. 


இரவில் மர்ம நபர்கள் ரூ.99 ஆயிரத்து 183 மதிப்புள்ள 71 லேப்டாப்களை திருடிச் சென்றனர். போலீசார் வழக்கு பதிந்தனர். லேப்டாப்களை கண்டுபிடிக்க முடியவில்லை என 2017ல் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர்.


கலைச்செல்வியிடமிருந்து ரூ.99 ஆயிரத்து 193 ஐ வசூலிக்க மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து கலைச்செல்வி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.


இதுபோன்ற சம்பவத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அரசு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியராக இருந்த சசிகலாராணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.


அதை எதிர்த்தும் ஓய்வுக்கால பலன்களை வழங்க உத்தரவிடக்கோரியும் அவரும் மனு செய்தார்.


நீதிபதி பட்டு தேவானந்த்: திருவையாறு அரசு பள்ளியில் திருடுபோன 28 லேப்டாப்கள் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவை யாரிடம், எங்கிருந்து மீட்கப்பட்டன,


தாடையம்பட்டி கள்ளர் சீரமைப்பு பள்ளியில் வாட்ச்மேனை நியமிக்க தலைமையாசிரியர் வலியுறுத்தியும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. லேப்டாப் பாதுகாப்பில் சட்டத்தின் எந்த விதியின் கீழ் தலைமையாசிரியர்களுக்கு பொறுப்பு உள்ளது, அவர்கள் பள்ளி நேரத்திற்குப் பின் இரவில் எப்படி பாதுகாக்க முடியும், கல்விச் சட்டம், விதிகளின்படி தலைமையாசிரியர்களின் கடமைகள், பொறுப்புகள் என்ன, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களை பாதுகாக்க அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை,


தலைமை ஆசிரியரின் பணியானது கல்வி கற்பிப்பதா அல்லது லேப்டாப்களை பாதுகாப்பதா? எதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர்களின் பண பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது? லேப்டாப்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தான் பொறுப்பு என்பது எந்த விதியில் உள்ளது? 


இந்த வழக்கில் எல்காட் நிர்வாக இயக்குனர், தஞ்சை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர். இவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை டிசம்பர் 7-க்கு ஒத்திவைக்கப்படுகிறது''என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.


சைபர் கிரைம் பிரிவின் உதவியுடன் காணாமல்போன லேப்டாப்களை ஐ.எம்.இ.ஐ.,எண்ணைக் கொண்டு விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலர், எல்காட் மேலாண்மை இயக்குனர், மதுரை, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி.,க்கள் தரப்பில் டிச.,7 ல் பதில்மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


Post Top Ad