'மாநிலத்தில் 1300 அரசு பள்ளி தலைமையாசிரியர்களை பதவியிறக்கம் செய்யும் முடிவை கைவிட்டு, அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக நீதிமன்ற வழக்கில் அரசு மேல்முறையீடு செய்ய முன்வர வேண்டும்' என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் போர்க்கொடி துாக்கியுள்ளது.
அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் (பி.டி.,) முதுகலை ஆசிரியர்களாக (பி.ஜி.,) பதவி உயர்வு பெற்று சென்றாலும் அவர்கள் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களாக பணிமாறுதல் பெற முடியும் என்ற நடைமுறை 47 ஆண்டுகளாக உள்ளது.
மேல்நிலைக் கல்வி உருவாக்கப்பட்ட பின் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு மேல்நிலை வகுப்புகளுக்கும், ஆசிரியர் பற்றாக்குறை இருப்பின் மாணவர் நலன் கருதி கீழ்நிலை வகுப்புகளுக்கு முதுகலை ஆசிரியர்களும் பாடம் நடத்தும் நடைமுறை உள்ளது.
இதன் அடிப்படையிலான அரசு உத்தரவுப்படி 2018க்கு பின் 1300க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பின் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களாக பணிமாறுதல் பெற்றனர். இவர்கள் பணியும் வரன்முறை செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அடிப்படையில் 1300 தலைமையாசிரியர்களை பதவியிறக்கம் செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில தலைவர் அன்பரசன் கூறியதாவது:
பல வழக்குகளில் அரசு மேல்முறையீடு செய்வது வழக்கம். கல்வித்துறை உத்தரவை பின்பற்றி தான் 1300 தலைமையாசிரியர்களுக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் மேல்முறையீடு செய்யாமல் பதவியிறக்கம் செய்ய முனைப்பு காட்டுவது அதிர்ச்சியாக உள்ளது.
ஐந்து ஆண்டுகள் தலைமையாசிரியர்களாக பணியாற்றி மீண்டும் ஆசிரியர் நிலைக்கு இறக்கினால் அதற்கான பணியிடங்கள் காலியாக இருக்கின்றனவா. இந்த முடிவு கடும் நிர்வாக சிக்கலை தான் ஏற்படுத்தும்.
ஏற்கனவே அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கும் நிலையில் மேலும் 1300 தலைமையாசிரியர் பணியிடங்கள் பாதிப்பை ஏற்படுத்தும். அரசு இவ்விஷயத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
இதை வலியுறுத்தி நவ.,21ல் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். மீண்டும் ஒரு ஆசிரியர்கள் போராட்டத்தை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment