பிளஸ் 1 தாவரவியல்
'நீட்' நுழைவுத் தேர்வுக்கான வெற்றியை தாவரவியல் பாடமே தீர்மானிக்கிறது. அந்த தாவரவியலிலும், பிளஸ் 1 பாடப் பகுதியிலிருந்தே 25-க்கும் மேற்பட்ட வினாக்கள் இதுவரை கேட்கப்பட்டுள்ளன. எனவே பொதுத் தேர்வுக்கு அப்பாலும் பிளஸ் 1 தாவரவியல் முக்கியத்துவம் பெறுகிறது.
வினாத்தாள் வடிவமைப்பு
70 மதிப்பெண்களுக்கான தாவரவியல் வினாத்தாள் 4 பகுதிகளைக் கொண்டுள்ளது.
ஒரு மதிப்பெண் பகுதியின் 15 வினாக்களில் பெரும்பாலானவை, நேரடி வினாக்களாக அல்லாது உயர் சிந்தனைக்கான வினாக்களாகவே உள்ளன.2 மற்றும்3 மதிப்பெண்களுக்கானவினாக்கள், கொடுக்கப்பட்ட தலா 9-லிருந்து 6-க்கு விடையளிப்பதாக அமைந்திருக்கும். அவற்றில் தலா ஒன்று கட்டாய வினாவாகும். விரிவான விடைக்கான நான்காவது பகுதியில், 'அல்லது' வகையிலான 5வினாக்கள் அமைந்துள்ளன.
அதிக மதிப்பெண்களுக்கு
அதிக மதிப்பெண்களைக் குறிவைக்கும் மாணவர்கள் அனைத்துபாடங்களையும் முழுமையாகப் படிப்பதுடன், பாடக் கருத்துகளைதெளிவாகவும், எளிமைப்படுத்தியும் புரிந்துகொள்வது அவசியம். செய்து காட்டல் முறையில் ஆசிரியர் நடத்திய பாடங்கள் அனைத்தும், தேர்வுநோக்கில் மிகவும் முக்கியமானவை. அவற்றைமுறையாக படித்திருப்பதுடன் அவ்வப்போது திருப்புதல் செய்வதும் அவசியம். பல்வேறு பாடங்களிலும் விரவிக்கிடக்கும் பாடக்கருத்துகளை அவற்றின் ஒற்றுமைகள் அல்லது வேற்றுமைகளின் அடிப்படையில் ஒப்பிட்டு படிப்பது நினைவில் நிறுத்த உதவும். படம் வரைந்து பாகம்குறித்தல் மூலமும் பாடக்கருத்துகளை மனத்தில் பதியச்செய்யலாம். இதன் மூலம் படங்களை வரைவதிலும் தேவையான பயிற்சி கிட்டும்.
தேர்ச்சி நிச்சயம்
மெல்ல கற்போரும், இதுவரைபடிப்பில் கவனம் செலுத்தாதவர்களும் இப்போது தொடங்கி முறையாக படித்தாலே, தேர்ச்சிக்கு அப்பாலும் மதிப்பெண்களை குவிக்க முடியும். 1, 2, 3, 4 ஆகிய அலகுகளின் பாடங்களில் உள்ள 'படம் வரைந்து பாகம் குறித்தல், வேறுபடுத்துதல், அட்ட வணைப்படுத்துதல்' உள்ளிட்டஎளிமையான பகுதிகளில் முறையான பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்வது தேர்ச்சியை உறுதிசெய்யும்.
QR Code வாயிலாக கிடைக்கும் எளிமையான பாடக்கருத்துகளைப் புரிந்துகொள்வது கூடுதல் வினாக்களுக்கு விடையளிக்க உதவும். இருக்கும் குறைவான காலஅவகாசத்தில் பாடங்களின் பின்னுள்ள வினாக்களுக்கு முன்னுரிமை தந்து படிக்க வேண்டும். குறிப்பாக 1, 4, 5 ஆகிய அலகுகளின் அனைத்துப் பகுதிவினாக்களுக்கும் 2, 3 அலகுகளின் 5 மற்றும் 1 மதிபெண் வினாக்களும் முக்கியமானவை.
கட்டாய வினாக்கள் கடினமல்ல
நடைமுறை பயன்பாடுகள் சார்ந்த பாடக்கருத்துகளில் இருந்தே கட்டாய வினாக்கள் கேட்கப்படும். எ.கா: 'பாசிகள் ஏன் வழுக்குகின்றன? மண் வாசனை எதனால் ஏற்படுகிறது?'.
திறனறி வினாக்களான 'படம்வரைந்து பாகங்களை குறிப்பதான' வினாக்களும் இதில் இடம்பெற வாய்ப்புண்டு. 'தாவர செல், மைட்டோகாண்ட்ரியா, கோல்கை உடலம், பசுங்கணிகம், ரைபோசோம், குரோமோசோம், பாலிடீன்மற்றும் விளக்கு தூரிகை குரோமோசோம்கள்' ஆகியவற்றின் அமைப்பைப் படம் வரைந்து பாகம்குறித்தலில் ஒரு 3 மதிப்பெண் வினாவேனும் நிச்சயம் இடம்பெறும்.
ஒரு விடைக்கான பல வினாக்கள்
தாவரசெயலியல் அலகில் சிலவிடைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வினாக்கள் உள்ளன. உதாரணமாக 'இருள் வினை, சி3 சுழற்சி, உயிர்ம உற்பத்திநிலை, ஒளிச்சேர்க்கையின் கார்பன் ஒடுக்க சுழற்சி' ஆகிய அனைத்துக்கும் ஒரே விடைப்பகுதியாக 'கால்வின்சுழற்சி' அமைந்திருக்கும். வினாவைப் பொறுத்து ஒரே விடையை சிறு மாற்றங்களுடன் பதிலளிப்பதாகவும் அமைந்திருக்கும். இம்மாதிரியான இடங்களில் தவறுகளை தவிர்ப்பதற்கு, வினாவுக்கு உரிய விடை என்பதாக படிப்பதைவிட, ஒரு விடைக்குஉரிய பல்வேறு வினாக்களை அடையாளம் கண்டு படிப்பது நல்லது. மேலும் தேர்வில் பதிலளிக்கையில் வினாவை பல முறை வாசித்து பொருளுணர்ந்து விடையளிப்பதும் உதவும்.
5 மதிப்பெண்ணில் கேட்கப்படுபவை
5 மதிப்பெண் பகுதியில் தாவர குடும்பங்களின் கலைச்சொல் விளக்கம் பகுதியிலிருந்து ஒரு வினாவேனும் எதிர்பார்க்கலாம். எ.கா: 'கிளைட்டோரியா டெர்னேஷியா, அல்லியம் சீபா தாவரங்களின் கலைச்சொல் விளக்கம் தருக' ஆகியவை.
மேலும் 'கிராம் சாயமேற்றும் முறையின் படிநிலைகள், இலையமைவு முறைகள், சூல் ஒட்டு முறையின் வகைகள், ஆண்டு வளையம், டைலோசிஸ் அமைப்பு,கிளைக்காலைசிஸ், C3 சுழற்சி, C4 சுழற்சி, தாவர ஹார்மோன் ஆக்ஸின், சைட்டோகைனின், ஜிப்ரலின்' தொடர்பான வினாக்களையும் எதிர்பார்க்கலாம்.
கூடுதல் கவனக் குறிப்புகள்
தாவரவியலை பொறுத்தவரை 'படம் வரைக' என வினாத்தாளில் குறிப்பிட்டு கேட்காதபோதும், அவசியமான படங்களைத் தேவையான இடங்களில் வரைந்தாக வேண்டும்.
'நியாயப்படுத்து, உனது கருத்து என்ன, விவாதி' போன்ற உயர் சிந்தனையைத் தூண்டும்வினாக்களுக்கு விடையளிக்கும்போது, பிற பாடங்களில் உள்ள அவசியமான கருத்துகளை தொடர்புப்படுத்தி எழுதுவதால். இதற்கு, ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் அம்மாதிரியான வினாக்கள் மற்றும் பாடப்பகுதிகளை அடையாளம் கண்டிருப்பது திருப்புதலுக்கு உதவும்.
'தாவர செயலியல்' பாடத்தில் சோதனை குறித்த வினாக்களுக்கு பதிலளிக்கையில் படம் வரைவது கட்டாயம். இதே வினாவுக்கு 'செய்முறைத் தேர்வுகளில் படம் வரையத் தேவையில்லை' என்ற வழிகாட்டுதலில், கருத்தியல் தேர்விலும் மாணவர்கள் படத்தை தவற விடுவது நடக்கிறது.
5 மதிப்பெண் வினாக்களுக்குத் தாயாராகும்போது, அவற்றினுள் பொதிந்திருக்கும் இதர மதிப்பெண் வினாக்களையும் அடையாளம் கண்டு படிப்பது முறையான திருப்புதலுக்கு உதவும்.
பாடநூலில் உள்ள தன்மதிப்பீடு வினாக்களில் இருந்து, சுயமாக வினாக்களை உருவாக்கிப் படிப்பது, பொதுத்தேர்வின் உயர் சிந்தனைக்கான வினாக்கள் மற்றும் 'நீட்'நுழைவுத் தேர்வுக்கும் உதவும்.
திருப்புதலில் 3,5 ஆகிய எளிமையான அலகுகளை முதலிலும்,ஏனைய அலகுகளை அடுத்துவரும் வாரங்களிலும் படிக்கத் திட்டமிடலாம். ஒவ்வொரு வார இறுதியிலும் பாடங்களை திருப்புதல் செய்யும்போது கூடவே 'உங்களுக்குத்தெரியுமா? கற்றதை சோதித்தறிக'போன்ற தேர்வுக்கு வாய்ப்புள்ள பகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.
- பாடக்குறிப்புகள் வழங்கியவர்: ஆர். சரவணன், முதுகலை ஆசிரியர் (தாவரவியல்),
அரசினர் மேல்நிலைப் பள்ளி, கண்டமானடி,
விழுப்புரம் மாவட்டம். தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்