புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27 ஆம் தேதி அறிவிப்பு!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
தொகுதி மறுவரையறை பணிகளை முழுமையாக முடிக்காமலேயே தேர்தல் அறிவிப்பாணை வெளியாகியுள்ளதால் தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும் விடுபட்ட 9 மாவட்டங்களில் நான்கு மாதங்களுக்குள் மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
அதாவது நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற புதிதாக பிரிக்கப்பட்ட இந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.
இந்நிலையில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் ஒட்டுமொத்த மாவட்டங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஜனவரி 27-ஆம் தேதி மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.