TNTET - மதிப்பெண்கள் குறைக்க தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, April 4, 2024

TNTET - மதிப்பெண்கள் குறைக்க தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை

 




ஆந்திரா உள்பட அண்டை மாநிலங்களில் உள்ளதைப் போலவே தமிழ்நாட்டிலும் ஆசிரியர் தகுதித் (TNTET) தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் குறைக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியில் சேர போராடும் ஆசிரியர்கள் வைத்துள்ள கோரிக்கையில் கூறியுள்ளதாவது: தற்போதைய சூழலில் ஆசிரியர் தகுதித் தேர்வு(TNTET) என்பது ஒருவர் ஆசிரியர் என்பதற்கான தகுதியை நிர்ணயிக்கும் தேர்வு மட்டுமே.


தற்போது இந்தத் தேர்வு ஆசிரியர் பணியைப் பெறுவதற்தான தேர்வு அல்ல . தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்காக TNTET தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் இரண்டாவதாக ஒரு தனி போட்டித் தேர்வு நடத்தப்பட்டு அதில் பெறுகின்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தற்போது ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது.


ஆகவே ஆசிரியர் தகுதி தேர்வு என்பது தற்போது ஆசிரியர்களின் தகுதியை மட்டும் நிர்ணயிக்கும் தேர்வு என்பதை கருத்தில் கொண்டு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை பொதுப் பிரிவினருக்கு 90 ஆகவும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 75 ஆகவும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 60 ஆகவும் மற்ற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் குறைத்து வழங்க வேண்டும்.


உதாரணமாக ஆந்திர மாநிலத்தில் OC (பிற பிரிவு) விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 60% அதாவது 90 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். BC (பிற்படுத்தப்பட்ட வகுப்பு) விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 50% அதாவது 75மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். SC/ST/மாற்றுத் திறனாளிகள் (PH) விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40% அதாவது 60மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.


ஆந்திராவைப் போன்றே மேலும் பல்வேறு மாநிலங்களில் இத்தகைய நடைமுறையே பின்பற்றப்படுகிறது. எனவே பிற மாநிலங்களில் உள்ளபடி தமிழ்நாட்டிலும் தேர்வர்கள் நலன் கருதி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து சமூக நீதியினை மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் நிலை நாட்ட ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்பதே தகுதித் தேர்வு எழுதும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது ." இவ்வாறு ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையில் கூறியுள்ளனர்.


முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் , தொடக்க கல்வித்துறையில் 2023-24ம் ஆண்டில் ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் 1768 இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுகின்றனர். பிப்ரவரி 14ம் தேதி நாளைய தினம் முதல் மார்ச் 15ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தது.


காலியிடங்கள்: கள்ளர் நலப் பள்ளிகளில் 18, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 139, மலைவாழ் நல பள்ளிகளில் 22, மாற்றுத்திறன் கொண்டோர் நலப் பள்ளிகளில் 29 இடங்களும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 20, சிறுபான்மை மொழி உருது 1 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்த போட்டித்தேர்வு தொடர்பான முழு விவரங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.


போட்டித் தேர்வில் பங்கேற்க விரும்பும் நபர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு தற்போது பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் 150 கேள்விகள் இடம்பெறும். மதிப்பெண்கள் 150 வழங்கப்படும். இந்த தேர்வில் பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 60 மதிப்பெண்கள் (40 சதவீதம்), பிசி, பிசிஎம், எம்பிசி, எஸ்சி, எஸ்சிஏ மற்றும் எஸ்டி பிரிவினர் குறைந்தபட்சமாக 45 (30 சதவீதம்) மதிப்பெண்ணும் பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.



Post Top Ad