போலி அழைப்புகளை நம்ப வேண்டாம் - பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை - Asiriyar.Net

Wednesday, April 10, 2024

போலி அழைப்புகளை நம்ப வேண்டாம் - பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை

 கல்வி உதவித் தொகை குறித்துவரும் செல்போன் அழைப்புகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 


இதற்கிடையே சமீபகாலமாக மர்மநபர்கள் சிலர் பள்ளி மாணவர்களை செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு, கல்வி உதவித்தொகை குறித்து பேசுவதாக கூறி பணம் பறிக்கும் மோசடி செயல்படுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறைக்கு புகார்கள் கிடைக்கப் பெற்றன.


இதையடுத்து கல்வி உதவித்தொகை சார்ந்த செல்போன் அழைப்புகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்த அதிகாரிகளும் மாணவர்கள், பெற்றோரின் செல்போன்களுக்கு தொடர்பு கொள்ளமாட்டார்கள்.


ஆனால், சில சைபர் குற்றவாளிகள் கரூர் மாவட்டத்தில் பல்வேறு மாணவ, மாணவிகளிடம் கல்வித்துறை அதிகாரிகள் என்றுகூறி வாட்ஸ்அப் செயலி மூலம்க்யூ ஆர் குறியீட்டை அனுப்பி அதை ஸ்கேன் செய்யவைத்து பணம் பறித்துள்ளனர். எனவே,யாரும் இதுபோன்று பேசுபவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.


Post Top Ad