அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.20 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,576 அரசுப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் 53 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளிகளில் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
வரும் (2024-25) கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழகஅரசு முடிவு செய்தது. இதையொட்டி, வழக்கத்தைவிட முன்னதாக, கடந்த மார்ச் 1-ம் தேதியேசேர்க்கை பணிகள் தொடங்கின. மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக விழிப்புணர்வு, விளம்பர பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் பலனாக, தமிழகம் முழுவதும் பெற்றோர் பலரும் தங்கள்குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் ஆர்வத்துடன் சேர்த்து வருகின்றனர். இதுவரை 3.20 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
பணிகள் தீவிரமாகும்: இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியபோது, ‘‘மக்களவை தேர்தல் பணிகள் முழுமையாக முடிந்த பிறகு, மாணவர் சேர்க்கை பணிகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும். அங்கன்வாடி மையங்களில் படித்த 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோரை ஆசிரியர்கள் மூலம் தொடர்பு கொண்டு, அரசுப் பள்ளியில் சேர்க்கும் பணியும்நடந்து வருகிறது. இந்த ஆண்டு 4 லட்சம் பேர் வரை அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்’’ என்றனர்.
No comments:
Post a Comment