2013-ல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 400 ஆசிரியர்களுக்கான பணியிடங்களை காலியாக வைத்திருக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, November 5, 2023

2013-ல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 400 ஆசிரியர்களுக்கான பணியிடங்களை காலியாக வைத்திருக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

 



கடந்த 2013-ம் ஆண்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 400 ஆசிரியர்களுக்கான பணியிடங்களை காலியாக வைப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் தற்போது 2,222 பட்டதாரி ஆசிரியர்களை நேரடி போட்டித் தேர்வு மூலம் நியமிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்கு பணி நியமனம் வழங்கக் கோருவது தொடர்பான வழக்குகள், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகள் மற்றும்ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.


மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கவிதா ராமேஸ்வர், ‘‘தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2,222 பட்டதாரி ஆசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பாணையை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், 2013-ம் ஆண்டுதகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 400 ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாக அரசுப் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர். 


அவர்களை முதலில் நேரடியாக நியமித்துவிட்டு, அதன்பிறகு மற்றவர்களை போட்டித் தேர்வு மூலம் நியமிக்க வேண்டும். குறிப்பாக, அவர்களை தனிப்பிரிவாக கருத வேண்டும்’’ என்றார்.


பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பணன், ‘‘தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு, உயர் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டதே. தேர்வாளர்கள் அனைவரையும் சமமாகவே பாவிக்க முடியும்’’ என்றார்.


அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘இப்போது தேர்வு எழுதுபவர்களையும், 2013-ல் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களையும் ஒரே மாதிரியாக பாவிக்க முடியாது. எனவே, அந்த 400 பேரை தனி பிரிவாக கருதி பணியிடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும்’’ என்றனர்.


அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பணன், இதுதொடர்பாக அரசிடம் ஆலோசித்து மனுவாக தாக்கல் செய்வதாகவும் அல்லது இந்த வழக்கில் வாதிட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆஜரான அரசு கூடுதல்வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன், ‘‘தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2,222 ஆசிரியர் பணியிடங்கள் என்பது உத்தேசமானதே. இந்த எண்ணிக்கை தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்படும்’’ என்றார்.


அதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவ.10-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். அன்றைய தினம் இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


அப்போது ஆஜரான மூத்தவழக்கறிஞர் காந்திமதி, போட்டித்தேர்வு தொடர்பான அரசாணை 149-ஐ எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அந்த வழக்கு நவ.6-ல் தனி நீதிபதி முன்பாக விசாரணைக்கு வரவுள்ளது என்றும் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், அந்த வழக்கை தனி நீதிபதி பார்த்துக் கொள்வார் என்றனர்.


Post Top Ad