ஜாதி ரீதியாக செயல்படும் ஆசிரியர்களுக்கு, அரசு தரப்பில் கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், ஜாதி பிரச்னையால், ஒரு மாணவனும் மாணவியும், மற்ற மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இம்மாதம், 2ம் தேதி, சென்னையில் நடந்த முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, ஆசிரியர்களும் ஜாதி ரீதியாக செயல்படுவதாக சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.அதனால், வரும் காலங்களில் மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள் மத்தியிலும், ஜாதி பிரச்னை ஏற்படாமல் தடுக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, சி.இ.ஓ., எனப்படும், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சி.இ.ஓ.,க்கள் அனுப்பியுள்ள எச்சரிக்கையில், 'எந்த பள்ளியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பாக, ஜாதியை குறிப்பிட்டு பேசுவது, பாகுபாடு காட்டுவது கூடாது.
அவ்வாறு நிகழ்வதாக புகார் எழுந்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது, தற்காலிக பணிநீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று, கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment