தமிழக பள்ளிக்கல்வியின் பல்வேறு இயக்குனரகங்கள் மற்றும் அதன் சார்பு அலுவலகங்கள், சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தில் இயங்குகின்றன.
அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளுக்காக, இந்த வளாகத்தில் குவிந்து திடீர் போராட்டம் நடத்துவது வழக்கம்.இதன்படி, தமிழ்நாடு பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தினர், மூன்று நாட்களாக காத்திருப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களை தொடர்ந்து, ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் உள்ளிட்ட சங்கத்தினர், இன்று முதல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில், ஆசிரியர் சங்கத்தினருக்கு, நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அதில், கூறியிருப்பதாவது:
முக்கிய நபர்களின் இல்லங்களுக்கு முன்பாகவும், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் முன்பாகவும், எந்த ஒரு தனி நபர் முன்பாகவும் மற்றும் அமைப்புக்கு எதிராகவும், எவ்வித போராட்டங்களும் நடத்த அனுமதி இல்லை. பொது அமைதியை கருத்தில் கொண்டு, சட்டம், ஒழுங்கு பிரச்னையை தவிர்க்கும் பொருட்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., கட்டட வளாகத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்க கல்வி, அரசு தேர்வுகள் துறை, தனியார் பள்ளிகள் இயக்குனரகம், ஆசிரியர் தேர்வு வாரியம், கல்வி டிவி தமிழ்நாடு பாடநுால் நிறுவனம், தபால் அலுவலகம், மின்துறை, அரசு நியாய விலைக்கடை என, 15 அலுவலகங்கள் செயல்படுகின்றன.இங்கு, 1,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் அலுவல் ரீதியாக இந்த வளாகம் வந்து செல்கின்றனர். எனவே, பொது அமைதி மற்றும் சட்டம், ஒழுங்கை காக்கும் வகையில், இன்று முதல் எந்த போராட்டமும் நடத்த அனுமதி இல்லை.இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment