அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசு வேலை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, September 27, 2023

அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசு வேலை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 



அடுத்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு அரசுப் பணிகளுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார்.


தமிழக அரசுப் பணிகளில் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் போன்ற காலியாக இருந்த 10,205 பணி இடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.


சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் 10,205 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 12 இளைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.


இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியது:


“போட்டித் தேர்வுகளில் தேர்வு பெற்று, எப்படியாவது ஒரு அரசுப் பணியை வாங்கிவிட வேண்டும் என்பது, படித்த இளைஞர்களுடைய ஒரு பெரிய கனவு.


அந்த அடிப்படையில், இன்றைக்கு உங்களுடைய இலட்சியக் கனவு நிறைவேறி இருக்கிறது என்றே சொல்லவேண்டும். அதனுடைய அடையாளம்தான், இப்போது உங்கள் கையில் இருக்கின்ற பணி நியமன ஆணைகள்.


பல லட்சம் பேர் தேர்வு எழுதி, லட்சத்தில் ஒருவராக நீங்கள் எல்லாம் தேர்வாகி இருக்கிறீர்கள். இப்படி லட்சத்தில் ஒருவராக இருக்கின்ற உங்களுக்கு, ‘மக்கள் சேவை’ என்ற ஒன்றுதான் இலட்சியமாக இருக்கவேண்டும். அதற்காக மட்டும்தான் நீங்கள் எல்லோரும் பணியாற்ற வேண்டும்.


கடந்த இரண்டாண்டு காலத்தில் 12 ஆயிரத்து 576 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது 10 ஆயிரத்து 205 நபர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல், நடப்பாண்டில் மேலும் 17 ஆயிரம் பேருக்கு பல்வேறு அரசுப் பணிகள் வழங்கப்பட இருக்கிறது.


அடுத்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு அரசுப் பணிகளுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் நான் இங்கே அறிவிக்க விரும்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.


இந்த நிகழ்வில், அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.



Post Top Ad