பதவி உயர்வு விதிமுறைகளில் உள்ள குழப்பத்தால் பாதிக்கப்பட்ட 13 ஆயிரம் முதுகலை ஆசிரியர்களும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் முதல்வர் மற்றும் கல்வித்துறைக்கு அஞ்சல் அட்டையில் கோரிக்கைகளை அனுப்பினர். தமிழக அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் கல்வித்தகுதி அடிப்படையில் முதுகலை ஆசிரியராகவும் அதன் பின் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் ஆகலாம் என்பது நடைமுறையில் உள்ளது; ஆனால் விதி இல்லை.
நடைமுறைப்படி 13 ஆயிரம் முதுகலை ஆசிரியர்களும் 1300க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர்.
முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று மேல்நிலை கல்விக்கு சென்றவர்கள் மீண்டும் உயர்நிலை கல்விக்கு வரக்கூடாது என ஆசிரியர்களில் ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு சாதகமான தீர்ப்பையும் பெற்றுள்ளனர்.
இதனால் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கனவில் பதவி உயர்வு பெற்ற 13 ஆயிரம் முதுகலை ஆசிரியர்களும் தற்போது உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 1300 தலைமை ஆசிரியர்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
இப்பிரச்னையில் தமிழக முதல்வரும் கல்வித் துறையும் தலையிட்டு முதுகலை ஆசிரியர்களின் பதவி உயர்வையும் பறிபோகும் நிலையில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவியையும் தக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் முதுகலை ஆசிரியர்களும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் தமிழக முதல்வர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அஞ்சல் அட்டையில் கோரிக்கைகளை எழுதி அனுப்பி நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment