நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே முதுநிலை மருத்துவர் கலந்தாய்வு இரண்டு சுற்று முடிந்திருக்கும் நிலையில், மூன்றாவது சுற்றுக் கலந்தாய்வுக்குச் சலுகையாக மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் தரத்தை அதிகரிக்கவே நீட் தேர்வு கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மருத்துவத்தில் முதுநிலை படிப்புக்கு நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும் பங்கேற்கலாம் என அறிவித்துள்ளது. இதனை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில், “நீட் = பூஜ்யம்; நீட் தேர்வால் பயனில்லை என மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. நீட் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் பூஜ்ஜியமாக குறைப்பதன் மூலம் நீட் தேர்வில் தகுதி என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை என்பதை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது. பயிற்சி மையத்திற்காவும், பணத்திற்காகவுமே நீட் தேர்வு. தகுதிக்கும், நீட் தேர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இதை நாம் காலம் காலமாக சொல்லி வருகிறோம். இது வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டது, உண்மையான தகுதிக்கான அளவுகோல்கள் எதுவும் இல்லை. விலைமதிப்பற்ற பல உயிர்கள் பலியாகியும் மனம் தளராத மத்திய பாஜக அரசு, தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது. நீட் என்ற பலிபீடம் மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்காக பாஜக அரசை அகற்ற வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment