தமிழ்நாடு அரசு தொடக்க கல்வித்துறை மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு எண்ணும் எழுத்தும் திட்டத்தை ஒன்று முதல் மூன்று வகுப்புகளுக்கு அறிமுகம் செய்தனர். நடப்பு கல்வி ஆண்டில் அதை ஐந்தாம் வகுப்பு வரை விரிவுபடுத்தினர்.
இத்திட்டத்தில் மாணவர்களின் கற்றல் அடைவுகள் அனைத்தும் அலைபேசி செயலி வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக தெரிகிறது.
இத்திட்டம் மாணவர்களின் கற்றல் அடைவுகளை முழுமையாக நிறைவு செய்யவில்லை என ஆசிரியர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் முதல் பருவம் தேர்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. 1 முதல் 3 வகுப்புகளுக்கு இத்தேர்வு முழுவதும் ஆன்லைன் செயலி மூலம் நடைபெறுவதால் அடிப்படை வசதிகள் இல்லாத ஆரம்பப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது:
எண்ணும் எழுத்தும் திட்டம் மாணவர்களின் கற்றல் அடைவுகளை பின்னோக்கி இழுத்து செல்கிறது. இத்திட்டத்தால் மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுதும் திறன் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே இதை ரத்து செய்ய வேண்டுமென்று போராடி வருகிறோம். ஒன்று முதல் மூன்று வகுப்பு படிக்கும் மாணவர்களை அலைபேசி செயலி வழியாக சோதிக்கப்படுவதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு வினாத்தாள் அவரவர்களின் கற்றல் நிலைகளுக்கு ஏற்ப மூன்று வகையாக செயலியில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவு நகலெடுத்து தேர்வு வைக்க வேண்டும் என எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அடிப்படை வசதிகள் இல்லாத குக்கிராமத்தில் பணியாற்றும் ஆசிரியர்களால் எப்படி இது சாத்தியமாகும்.
ஆரம்பப்பள்ளிகளில் இணைய வசதி, பிரிண்டர்மற்றும் பிற வசதிகள் இல்லாத காரணத்தால் தேர்வு வைப்பதில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வினாத்தாள்கள் செயலியில் வெளியிட்ட பின்னர் நகர் பகுதிகளில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மையங்களுக்கு ஆசிரியர்கள் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் கணினி மையங்கள் வினாத்தாள் பதிவிறக்கம் மற்றும் நகலெடுத்து தருவதற்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். இதற்கான நிதி ஆதாரங்கள் எதுவும் ஆரம்பப்பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஏற்கனவே எமிஸ் இணையதளத்தில்பல்வேறு பணிகளை செய்வதற்கு ஆசிரியர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முதல் பருவத் தேர்வு ஆசிரியர்கள்மத்தியில் மிகவும் மன அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றுள்ளோம்.
கிராமத்தில் உள்ள பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் ஆன்லைன் வழி தேர்வுகள் என்ற முறையில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் அவதிக்கு உள்ளாக்குவதை கல்வித்துறை கைவிட வேண்டும், என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment