கல்வித்துறையில் எது நடந்தாலும் "சஸ்பென்ட்" தான் தீர்வா? - Asiriyar.Net

Friday, September 29, 2023

கல்வித்துறையில் எது நடந்தாலும் "சஸ்பென்ட்" தான் தீர்வா?

 



பள்ளியில் தவறிழைக்கும் ஒரு மாணவனைக்கூட கண்டிக்க உரிமையில்லாத மிக மிக பரிதாபமான ஒரு பணியாக இன்று ஆசிரியர் பணி மாறிவிட்டது என்பதை நினைத்தால் வேதனைதான் வருகிறது.*


*பள்ளிக்கு மீசை,தாடி,நாடோடிகள் போல் தலை முடிகள்,முடி வெட்டுகளில் பல்வேறு வினோதங்கள்,கழுத்தில்,மணிக்கட்டில் வித விதமான சாதி மத பேதங்களை தூண்டச்செய்யும் கயிறுகள்,கை விரல்களில் வளையங்கள், முழங்கால் முட்டியை தொடப்போகும் பேன்டுகள் என இன்றைய மாணவர்கள் வரும் விதத்தை ஆசிரியரோ, தலைமை ஆசிரியரோ கண்டு கொள்ளக்கூடாது என்றால் அதை முன்னரே உத்தரவு இட்டு தெரிவித்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். 


அதை விட்டு விட்டு மாணவர்கள் சீருடைகள் எவ்வாறு இருக்க வேண்டும், தலைமுடிகள் எவ்வாறு வெட்டப்பட்டிருக்க வேண்டும்,எவற்றை யெல்லாம் அணியக்கூடாது என சுற்றறிக்கை விட்டு விட்டு அவற்றை கண்காணிக்க தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எதற்காக சுற்றறிக்கை விட்டார்கள்? மாணவன் தலைமுடியை கிராப் கட்டிங் முறையில் வெட்டி வர வேண்டும் என்று கூறியது அரசுதானே!அதைத்தானே அப்பள்ளி தலைமை ஆசிரியர் செய்யச் சொன்னார். 


இதில் அவர் மீது தவறு எங்கே உள்ளது?அரசின் உத்தரவை பின்பற்றினால் சஸ்பென்ட் செய்யப்படுவார்கள் என்றால் அரசின் உத்தரவுக்கு என்னதான் மரியாதை?இனி மாணவர்கள் கஞ்சா பாக்கு,சிகரெட், மது அருந்தி முழு போதையில் பள்ளிக்கு எப்போது வந்தாலும், பள்ளியிலே குடித்தாலும்,ஆசிரியர்களை,ஆசிரியர்களை சீண்டினாலும்,பள்ளி பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினாலும்,சக மாணவனையோ மாணவியையோ கொலை செய்தாலும் எவரும் கண்டு கொள்ளக்கூடாது என அரசு நினைக்கிறதா தெரியவில்லை!* 


*ஒரு பிள்ளையை பெற்று பள்ளியில் சேர்த்தால் மட்டுமே பெற்றோரின் கடமை முடிந்து விடுகிறதா?அவனை நன்றாக வளர்க்கத் கண்டிக்காமல்,பள்ளி ஆசிரியரும் கண்டிக்க விடாமல் பிள்ளை மேல் பாசம் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு அவன் செய்யும் அராஜக செயல்களை எல்லாம் கண்டும் காணாமல் இருக்கும் இப்படிப்பட்ட பெற்றோர்கள் தான் சமுதாயத்தின் மிகப்பெரிய குற்றவாளிகள். இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்லவா?


ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் 25000 அபராதம் விதிக்கும் அரசு, பள்ளியையும்,நன்கு படிக்கும் ஏழை மாணவர்களின் எதிர்காலத்தையும் சிதைத்துக் கொண்டிருக்கிறார்களே;அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எதற்குத் தயக்கம்?நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் பல்லாயிரக்கணக்கான ஓட்டுகள் போய்விடும் என்ற பயமா?


ஆசிரியர்கள் வாங்கும் சம்பளத்தை கொச்சைப்படுத்தி பொதுமக்கள் மத்தியில் பேசி அவர்களை ஆசிரியர்களுக்கு எதிராக திசை திருப்பும் அரசியல் வாதிகள், ஆசிரியர்கள் பள்ளியில் படும் வேதனைகளை பொதுமக்களிடம் கூற ஏன் தயக்கம்?


ஆசிரியர் ஓட்டு தேவையில்லை என்பதாலா?ஆசிரியர்களை விட மருத்துவர்கள் அதிகம் சம்பளம் வாங்குகிறார்களே? அதனை பொது வீதிகளில் ஏன் குறை கூறி கொட்டம் அடிக்க வில்லை?கடைசியில் அவர்களிடம்தான் போக வேண்டும் என்ற பயமா?


மருத்துவர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் உள்ளது.ஆசிரியர்களுக்கு கொடுக்க தயக்கம் ஏன்?உருவாக்கி விட்டவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டாமா?தெய்வத்திற்கு முன்னர் வணங்க வேண்டிய ஆசிரியர்களை நீங்கள் வணங்காவிட்டாலும் பரவாயில்லை அவர்களை தூற்றாமல் இருப்பதே நீங்கள் செய்யும் நன்றிக்கடன்.

 - நாஞ்சிலார்


Post Top Ad