பத்திர பதிவுக்கு வரும் ஆவணங்களில், பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படமும் ஆவணமாக இணைக்கப்பட வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதை தடுக்கவும், விடுதல் இன்றி அரசுக்கு வருமானம் வருவதை உறுதி செய்யவும் அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதால் அரசின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், எனவே காலி மனையிடங்களை புவியியல் ஆயங்கள் (geo coordinates) புகைப்படம் எடுத்து அதனை ஆவணமாக இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மோசடிகள் குறித்து புகார்கள் வரபெற்றுள்ளதால், சார் பதிவாளர் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து சொத்துகள் குறித்த ஆவணங்களிலும் புகைப்படம் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழிகாட்டுதல்கள் பதிவுத்துறை தலைவரால் தனியே வழங்கப்படும் என்றும், அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment