சுதந்திர தின பேச்சுப் போட்டி உரை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, August 14, 2023

சுதந்திர தின பேச்சுப் போட்டி உரை

 சுதந்திர தின பேச்சுப் போட்டி உரை

"நம்நாடு"


இமய முதல் குமரி வரை உடலெடுத்தும்,

இதயம் எல்லாம்  குளிரும்படி குரலெடுத்தும்,

தரணியெங்கும் ஒலிக்கதிராய்ப்  பரவிநிற்கும்,

தமிழ்த்தாயை வணங்குகின்றேன்!

என் உரையைத் தொடங்குகின்றேன்!


அவையோர் அனைவருக்கும், அன்பு வணக்கம்.

இந்தியத் திருநாடு பல்வேறு பெருமைகளைக் கொண்டது.

இயற்கை வளம், மனித வளம் இவற்றோடு அறிவியலிலும் புரட்சி செய்து,உலக நாடுகள் மத்தியில் நம் நாடு சிறந்த நாடாக வெற்றி நடை போட்டு வருகிறது. மேலும் அதன் வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டிய பணியினைப் பற்றியும், நாடு ஒளிர்வதற்கு நாம் ஆற்றவேண்டிய பங்கினைப் பற்றியும் உங்கள் முன் உரையாற்ற வந்துள்ளேன். கேளுங்கள்,கேட்ட பின்பு எனக்கு வாழ்த்துக் கூறுங்கள்.


உலக நாடுகள் அனைத்தும் வியக்கக்கூடிய அளவிற்கு,அரசியல் அமைப்புச் சட்டத்தை நாம் பெற்றுள்ளோம் மக்களாட்சி மாண்பினையும், அதன் மதிப்பினையும் உயர்த்தும் வண்ணம் நம் அரசியலமைப்பு திகழ்கிறது...

அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இணையாக, விண்வெளியில் இந்தியாவின் இஸ்ரோ பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

அதற்கு உதாரணம் சந்திராயன் l சந்திராயன் ll மற்றும் சந்திராயன் lll

போன்ற செயற்கைக்கோள்களே ஆகும்.


*கற்கை நன்றே, கற்கை நன்றே  பிச்சை புகினும் கற்கை நன்றே*.

ஆம்!பெற்ற சுதந்திரத்தை நாம் பேணிப் பாதுகாக்க மாணவர்களாகிய நம்முடைய பணி யாதெனில்,கல்வியின் அருமையைக் கருத்தில் கொண்டு அதனை நன்முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.கல்வியால் மட்டுமே உயர்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும், கல்வியால் மட்டுமே வளரும் நாடான நம் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க முடியும்!


மக்களின் எண்ணம் செழிப்புறவும், தீய வழிகளில் அவர்கள் செல்லாமல் இருக்கவும் மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களும், திருக்குறள் போன்ற அற நூல்களும் தொடர்ந்து நல்வழிகளைக் காட்டி வருகின்றன்... மகாத்மா காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர், மகாவீரர், புத்தர் முதலானோரின் வாழ்க்கை வரலாறு நம்மைப் பக்குவப் படுத்துவதாக அமைந்துள்ளன. மேலும் விடுதலைப் போராட்டத் தியாகிகளான வ. உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, பால கங்காதர திலகர், ராஜாராம் மோகன் ராய் முதலானோரின் தியாகங்களும், மெய்சிலிர்க்க வைக்கின்றன. ...


நம் கையில் என்ன இருக்கிறது? என்று நினைக்காதீர்கள், நம்பிக்கையில்தான் எல்லாம் இருக்கிறது என்பதை மறக்காதீர்கள்! என்ற பொன்மொழிக்கேற்ப நம்பிக்கை,உழைப்பு, முயற்சி போன்றவற்றை நம் மனதில் வளர்த்துக் கொண்டு வெற்றி நடை போட முற்படுவோம்! வெற்றிக்கனி  சுவைக்க விரைவாகச் செயல்படுவோம்! நம் வீடு,நம் மக்கள், நம்முடையது  என்று சுயநல சுல்தானாகச் சுற்றி வராமல்,

நம் நாடு, பொதுநலம் என்று நினைப்போம்! நம் பாரதம் நமக்கெனக் கருதி இருப்போம்!

இந்தியா என்பது நம் மூச்சு,

இணைந்தே செயல்பட்டால் வாழ்வாச்சு,

சிந்தித்தால் எல்லாம் நமதாச்சு!,

உங்கள் சிந்தையில் நிற்கும் என் பேச்சு!


நன்றி!

வணக்கம்!Post Top Ad