திருத்தணி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியின் கதவு பூட்டின் மீது, மனிதக் கழிவு பூசப்பட்ட சம்பவம் குறித்து, அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். இதுதொடர்பான அறிக்கை, கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மத்துார் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் நுழைவாயிலில் உள்ள பிரதான கதவு மற்றும் பூட்டின் மீது, மர்ம நபர்கள் மனிதக் கழிவுகளை பூசியும், கழிப்பறையில் மதுபாட்டில்கள் உடைத்தும், குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தியும் இருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பெற்றோர் நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து நம் நாளிதழில் நேற்று, படத்துடன் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், திருத்தணி கோட்டாட்சியர், முதன்மை கல்வி அலுவலர்மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகியோர், நேரில் சென்று விசாரித்து, முழுமையான அறிக்கை தயாரித்து தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
நேற்று காலை திருத்தணி கோட்டாட்சியர் தீபா, தாசில்தார் மதன், வருவாய் ஆய்வாளர் கமல் ஆகியோர் மத்துார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, திருத்தணி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முரளி ஆகியோர் பள்ளியில் ஆய்வு செய்தனர்.
கோட்டாட்சியர் தீபா கூறியதாவது:
பள்ளி பூட்டின் மீது மனிதக் கழிவுகள் பூசப்பட்டதற்கான காரணம், ஜாதி பிரச்னையா, மாணவர்கள் இடையே பிரச்னையா, மனிதக் கழிவுகளை பூசியது யார் என, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி பள்ளிக்கு சென்று தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோரிடம், விசாரணை நடத்தினோம்.
இதில், ஜாதி பிரச்னை இல்லை எனவும், மாணவர்கள் இடையே பிரச்னை இல்லை எனவும் தெரிந்தது. மர்மநபர்கள் வேண்டும் என்றே செய்துள்ளதாக தெரிந்தது. இதன் விரிவான அறிக்கை கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிராம மக்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதன்மை கல்வி அலுவலர் ஜி.சரஸ்வதி கூறியதாவது:
தற்போது படிக்கும் மாணவர்களுக்கு போதிய அளவிலான வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. கூடுதல் மாணவர் சேர்க்கை இருந்தால் மட்டுமே கூடுதல் கட்டடம் தேவைப்படும்.
மனிதக் கழிவு பூசப்பட்ட சம்பவம் குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்த விசாரணை அறிக்கையை கலெக்டருக்கு அனுப்பிஉள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முரளி கூறும்போது,''மாணவர்கள் பயன்படுத்தப்படும் கழிப்பறைகள் பழுதடைந்துள்ளன. இதை சீரமைக்க திட்டமதிப்பீடு தயார் செய்து, முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். நிதி கிடைத்தவுடன் கட்டடம் பழுது பார்க்கும் பணி துவங்கப்படும்,'' என்றார்.
மரபணு சோதனை
மத்துார் பள்ளி தலைமை ஆசிரியர் சத்யா அளித்த புகார்படி, பள்ளியின் பிரதான கதவு பூட்டு மற்றும் மூன்று வகுப்பறை கதவுகளில் மனிதக் கழிவுகள் பூசப்பட்டதற்கான கைரேகை சேகரிக்கப்பட்டுள்ளது.மேலும் மரபணு சோதனைக்கு, சென்னை மயிலாப்பூரில் உள்ள தடையவியல் துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மத்துார் கிராம மக்களிடம் விசாரணை துவங்கியுள்ளோம். கைரேகை பதிவுகளை வைத்து மனிதக் கழிவுகள் பூசிய மர்மநபர்களை கண்டுபிடித்து கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.
No comments:
Post a Comment