எண்ணும் எழுத்தும் - பொதுநபர் மதிப்பீடு குறித்து அச்சம் தேவையா? - Asiriyar.Net

Tuesday, August 29, 2023

எண்ணும் எழுத்தும் - பொதுநபர் மதிப்பீடு குறித்து அச்சம் தேவையா?

 

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையானது கடந்த சில கல்வி ஆண்டுகளாக தொடக்கக்கல்வி வகுப்புகளில் செயல்படுத்தி வரும் எண்ணும் எழுத்தும் திட்டமானது அனைத்துப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சென்றடைந்தது குறித்து பொது நபர் மதிப்பீடு (Third Party Evaluation) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.


இந்த மதிப்பீட்டினை மேற்கொள்ள அரசு , அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்வியியல் (B.Ed.) கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை ஈடுபடுத்த அறிவுறுத்தியுள்ளது. அதன் பொருட்டு அனைத்து மாவட்டங்களில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் முதலாம் மற்றும் இரண்டாம் மாணவர்கள் இந்த மீளாய்வுப் பணியில் மதிப்பீட்டாளராக (Enumerators) செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , இம்மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் அடைவு மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கான பயிற்சியானது அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலமாக 28.08.2023 முதல் 31.08.2023 வரை இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளதாகவும் அதன் பின்னர், அவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வகுப்பறை நுண்ணாய்வு (Field Investigation) பணியினை 01.09.2023 முதல் 15.09.2023 வரை நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இது பற்றிய தகவல் கசிந்த உடன் ஆசிரியர்கள் மத்தியிலும் அவர்கள் சார்ந்துள்ள ஆசிரியர் இயக்கங்கள் மத்தியிலும் ஒருவித அச்ச உணர்வும் அதனைத் தொடர்ந்து இது கூடாது என்கிற எதிர்ப்புக் குரலும் தீயாகப் பற்றிக்கொண்டு விட்டது.  பொதுவாக, கள ஆய்வு மேற்கொள்பவர்கள் தாம் நேரில் காணும் உண்மை நிலையை, உள்ளது உள்ளபடி மேலிடத்திற்கு ஓர் ஆய்வறிக்கையாக விருப்பு மற்றும் வெறுப்புக்கு இடம் கொடுக்காமல் தர முயல்வார்கள் என்பதுதான் உண்மை. இவர்கள் எந்தவொரு ஆலோசனையும் அறிவுரையும் விமர்சனம் செய்யவும் கடிந்து கொள்ளவும் மேலிடத்தைக் காரணம் காட்டி மிரட்டவும் போவதில்லை. அஃது அவர்கள் வேலையும் அல்ல.


'பணிக்கப்படுகிறார்கள்; பணி செய்ய உள்ளார்கள்' அவ்வளவே. இதில் எதிர்ப்புக்கு என்ன வேண்டி இருக்கிறது. அப்படியே ஆயிரத்தெட்டு குற்றம் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் தான் என்ன? தலையையா எடுத்துவிடப் போகிறார்கள்? இதுவரை எத்தனை தலைகள் உருண்டிருக்கின்றன? ஆசிரியர் பணிக்கு இன்றைய சூழலில் நியமனம் பெறுவது தான் மிகவும் கடினம். அது குதிரைக்கொம்பாக ஆகிவிட்டது. பணியில் உள்ள எந்த ஒருவரையும் எவராலும் அல்ல; ஏன் அந்த எமன் ஒருவரால் மட்டுமே இல்லை என்று ஆக்க முடியும்! பணி நிலவரம் இப்படியிருக்க/, வீண் பயமும் பீதியும் அதனூடாக விளையும் மன உளைச்சல்களும் ஆசிரியர் பெருமக்களுக்கு எதற்கு என்றே கேட்கத் தோன்றுகிறது. எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து கணக்கிலடங்கா நடைமுறை சிக்கல்களையும் கவலைகளையும் நாளும் பொழுதும் இறக்கி வைக்க இயல வழி தெரியாமல் விழி பிதுங்கிச் சுமந்து சோர்வுறும் இக்கட்டுகள் நிறைந்த இக்காலகட்டத்தில் தமக்கு ஒரு வாய்ப்பாகவும் வடிகாலாகவும் இதனைக் கருதுவதும் கருத்து தெரிவிப்பதும் தானே நல்லது.


அட! பொதுவெளியில் பட்டப்பகலில் துணிந்து குற்றம் செய்பவனே யாதொரு குற்ற உணர்ச்சியும் பயமும் இல்லாமல் வெள்ளையும் சொள்ளையுமாகப் பல்லிளித்துக் கொண்டு டாட்டா காட்டித் திரியும் போது எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் மறு மூச்சு விடக் கூட நேரம் இல்லாமல் குழந்தைகளுடன் குழந்தையாக உழன்று தவிக்கும் ஆசிரியர்களுக்கு என்ன குறைச்சல்? குறையொன்றுமில்லை என்று இன்னும் எத்தனைக் காலத்திற்கு உதிரும் சாம்பலாகக் குமுறி அடங்கிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?


எண்ணும் எழுத்தும் திட்டத்தினைச் செயல்படுத்துவதில் வகுப்பறைகளில் காணப்படும் நடைமுறை பிரச்சினைகள், ஆசிரியர்களுக்கு இதனால் ஏற்படும் மன உளைச்சல்கள், மாணவரிடத்து இதனால் எழும் கற்றல் சிக்கல்கள், தொடர் செயலிவழி அடைவு மதிப்பீடுகளில் பொதிந்து கிடக்கும் குறைபாடுகள், பல்வேறு காரணங்களால் மாணவரிடையே காணப்படும் தொடர் வருகையின்மையால் உருவாகும் கூடுதல் பணிச்சுமைகள், பாடப் புத்தகம் மற்றும் பயிற்சி புத்தகங்கள் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட எதிர்நிலை வேறுபாடுகள், உரிய கற்பித்தல் வளங்கள் திரட்டுவதற்கும் உருவாக்குவதற்கும் போதிய கால அவகாசம் கிடைக்கப் பெறாமல் கிடந்து அல்லாடும் அவலப் போக்குகள், குழுவாகக் கற்றல், கையெழுத்துப் பயிற்சி பழக்குதல், நினைவாற்றல் திறன் வெளிப்பாடு போன்றவற்றிற்கான வாய்ப்பில்லாத நோக்குகள் முதலானவற்றை ஒரு மூன்றாம் பொதுநபர் மூலமாக அரசுக்குத் தெரியப்படுத்த இஃது ஒரு நல்ல வாய்ப்பாகும். இரும்புத்திரை நாடுகள் என்றழைக்கப்படும் செஞ்சீனம், அதிரடி வடகொரியா உள்ளிட்ட நாடுகளே உலகின் கெடுபிடிகளிலிருந்து தப்பிக்க வேறுவழியின்றி, நீங்கள் நினைப்பது போல இங்கு எதுவும் நடைபெறவில்லை என்று திரை விலக்கிக் காட்ட முனையும் நிலையில் வெளிப்படைத் தன்மையும் குடிமைப் பண்புகள் பலவும் கோலோச்சும் வகுப்பறைகளை மாணவர்கள் மகிழ்ந்து வாழும் கல்வித்தாயின் திறந்தவெளிக் கருவறைகளைக் காட்டுவதில் யாது தயக்கம்?


கல்வி ஒன்றும் ஆளைக் கண்டதும் நிகழ்த்துவதற்கும் நிகழ்வதற்கும் அவசர சமையல் அல்ல. அஃது ஒரு விதை போல மெதுவாகத்தான் துளிர்க்கும். ஒரு மொட்டு போல் மெல்லத்தான் மலரும். இதுதான் கற்றல் உளவியலின் அடிப்படை விதியாகும். எம் மாணவர்கள் அண்மையில் நிலவில் தடம் பதித்த சந்திராயன் 3 உடன் சேர்ந்து துள்ளி விளையாடுவார்கள் என்று பிதற்றுவது எல்லாம் பொருட்படுத்த வேண்டிய உண்மையான சேதியல்ல.  வெற்று விளம்பரத்திற்காக அத்தகையோர் வெறுமனே பொய்யாக, போலியாக, பகட்டாக நடித்துக் கொண்டும் பிதற்றிக் கொண்டும் உண்மையில் உள்ளுக்குள் அழுது கொண்டும் இருக்கிறார்கள் என்பதைப் புறம்தள்ளக் கூடாது.


அந்த வலிக்காத மாதிரி நடித்துக் கொண்டிருப்பது என்பது பயனற்ற ஒரு வீண் வேலை. அவர்கள் வேடிக்கையான ஆசிரியர்கள் அவ்வளவே. அத்தகையோரைக் கண்டு துணுக்குறுவது தேவையற்றது. உழைக்காதவர்கள் கவலையும் எதிர்ப்பும் ஒருவகையில் நியாயமானதே. அவர்கள் கண்டிக்கவும் தண்டிக்கவும் ஆசிரியர்களாகவே இருக்க தகுதியற்ற பிறவிகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தம் மனசாட்சிக்குப் பயந்து கட்டுப்பட்டுத் திக்கற்ற ஏழை, எளிய, அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை மக்களின் பிள்ளைகள் புகும் கடைசிப் புகலிடமாகத் திகழும் அரசுப் பள்ளிகள் மற்றும் எளிய அரசு உதவி பெறும் பள்ளிகள் நோக்கி வந்து சேர்ந்திருப்போரின் மீது கருணை கொண்டு உழைக்கும் ஈரமனம் நிறைந்தோருக்கு காசு கொடுத்துப் பெறும் ஊடக வெளிச்சம் நல்ல அத்தாட்சி அல்ல; நஞ்சு கலக்காத பிஞ்சு உள்ளங்களில் 'எங்க சாரு; எங்க டீச்சரு!' என்கிற பேரன்பு கொண்ட மழலை மொழியே ஆகச் சிறந்த மனசாட்சியாகும்.


அதுபோல், கல்வித்துறையும் உயர் அலுவலர்களும் எண்ணும் எழுத்தும் திட்டத்தைச் சிறப்பாகக் கையாளும் இருபால் ஆசிரியர்கள் கூறும் நியாயமான, மனிதாபிமான, ஏற்கத்தக்க கருத்துகளுக்கும் ஆலோசனைகளுக்கும் இந்த மதிப்பீடு செயல்முறைகள் வாயிலாகச் செவிமடுப்பது என்பது இன்றியமையாதத் தேவையாகும். அதிகாரத்துவம் எந்தவொரு நிலையிலும் வேண்டியதில்லை.  கல்வியை ஏதேச்சதிகாரத்தால் அறுவடை செய்திட முடியும் என்ற எண்ணம் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் இருப்பது என்பது மாணவர் நலனுக்கு எதிரான அநீதியாகும். இன்றைய மாணவ ஆசிரியராக எண்ணும் எழுத்தும் திட்ட மதிப்பீட்டுப் பணியைச் செவ்வனே செய்ய வரும் மதிப்பீட்டாளரை இன்முகத்துடன் வரவேற்பதுடன் அவருக்குத் தேவைப்படும் மதிப்பீடு சார்ந்த உதவிகளையும் எதிர்பார்ப்புகளையும் பாதிப்புகளையும் பக்குவமாக எடுத்துரைப்பது ஒவ்வொரு எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களின் தலையாயக் கடமையாகும்.


இந்த நிலையில் இதுகுறித்து வீணாகப் பயப்படுவதில் ஒரு பொருளும் இல்லை. இன்றைய சூழலில் பள்ளி என்பது ஆசிரியர்களுக்கு மட்டும் உரித்தானதாக இல்லை. பள்ளி மேலாண்மைக் குழு, முன்னாள் மாணவர் சங்கம், இல்லம் தேடிக் கல்வி, காலை உணவுத் திட்டம், வானவில் மன்றம், நம்ம ஊரு பள்ளிப் புரவலர்கள் திட்டம், கலைத் திருவிழா, கல்வித் திருவிழா எனத் தேரை இழுத்து வந்து தெருவில் விட்ட பிறகு தம் கற்பித்தலின் விளைவாக நிகழும் கற்றல் அடைவுகளைச் சோதிக்கும் மதிப்பீட்டை மூடி மறைக்க முயல்வது என்பது இயலாத ஒன்று. இதை மனத்தில் இருத்திக்கொண்டு எண்ணும் எழுத்தும் திட்ட மதிப்பீட்டிற்கு வகுப்பறையைத் திறந்து வைப்போம். உள்ளுக்குள் புகையும் வெம்மை தணிந்து புதிய வசந்தம் வரட்டும்!


- எழுத்தாளர் மணி கணேசன்


No comments:

Post a Comment

Post Top Ad