பள்ளியில் மரம் விழுந்து மாணவி பலி - ரூ.5 லட்சம் நிதியுதவி - முதல்வர் உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, August 30, 2023

பள்ளியில் மரம் விழுந்து மாணவி பலி - ரூ.5 லட்சம் நிதியுதவி - முதல்வர் உத்தரவு

 தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை பெய்த பலத்த மழையின்போது, பள்ளி வளாகத்தில் மரம் விழுந்ததில் பலியான பத்தாம் வகுப்பு மாணவியின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 


பாபநாசம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.


இந்தநிலையில், பாபநாசம் அருகே பசுபதிகோவில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நேரம் முடிந்து மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளியேறி வீட்டுக்கு புறப்பட்டனா். 


அப்போது, காற்றுடனான மழை பெய்ததால், பள்ளி வளாகத்தில் இருந்த மரம் சாய்ந்து விழுந்தது. இதில், பத்தாம் வகுப்பு மாணவிகளான கண்டகரையத்தைச் சோ்ந்த செந்தில் மகள் சுஷ்மிதா (15), கணபதி அக்ரஹாரம் தச்ச தெருவைச் சோ்ந்த கந்தன் மகள் ராஜேஸ்வரி (15) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். 


இவா்களில் சுஷ்மிதா நிகழ்விடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.


சம்பவம் குறித்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.


இந்த நிலையில் பள்ளியில் மரம் விழுந்து பலியான மாணவி சுஷ்மிதா குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, ரூ.5 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார். 


முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 


தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பசுபதிகோவில்-1 கிராமத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் பாபநாசம் வட்டம், உள்ளிக்கடை, கண்டகரையத்தைச் சோ்ந்த செந்தில் மகள் சுஷ்மிதா ஷென்(15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.  


மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மகள் ராஜேஸ்வரிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.


மாணவி சுஷ்மிதாஷென்னை இழந்து வாடும் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராஜேஸ்வரிக்கு ரூ.1 லட்சம் நிதியதவி வழங்கவும் உத்திரவிட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 


Post Top Ad